7 இலக்குகளை 10ஆண்டுகளில் எட்டிட மாவட்ட ஆட்சியர்களின் ஒத்துழைப்பு அரசுக்கு தேவை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வளரும் வாய்ப்புகள் - வளமான தமிழ்நாடு உள்ளிட்ட  7 இலக்குகளைப் பத்தாண்டுகாலத்தில் எட்டிட மாவட்ட ஆட்சித் தலைவர்களின் ஒத்துழைப்பு அரசுக்கு அவசியம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

7 இலக்குகளை 10ஆண்டுகளில் எட்டிட மாவட்ட ஆட்சியர்களின் ஒத்துழைப்பு அரசுக்கு தேவை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன்  முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  
ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில், கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுத்திட மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நோய்த் தொற்றுப் பரவல் எண்ணிக்கையை மேலும் குறைத்திட  வேண்டும் என்றும்  முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும், கல்வி  வேலைவாய்ப்பு மற்றும் சமூகப் பொறுப்புகளில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அதிகாரத்தை, பதவியைப் பயன்படுத்தித் தங்களது கடமையை ஆற்ற வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டு கொண்டுள்ளார் 

அத்துடன் வளரும் வாய்ப்புகள் - வளமான தமிழ்நாடு!,மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி!, 

குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்!,

அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் உயர்தர மருத்துவம்!,

எழில்மிகு மாநகரங்களின் மாநிலம்!,

உயர்தர ஊரகக் கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம்!,

அனைவருக்கும் அனைத்துமான தமிழகம்! 

ஆகிய 7 இலக்குகளைப் பத்தாண்டுகாலத்தில் எட்டிட மாவட்ட ஆட்சித் தலைவர்களின் ஒத்துழைப்பு அரசுக்கு அவசியம் என்றும் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி  உள்ளார். 

பொதுவிநியோகத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்திட வேண்டும் என்றும், அனைவருக்கும் குடும்ப அட்டைகள் கிடைத்திடவும், போலி அட்டைகளை ஒழித்திடவும்,  உணவுப் பொருட்கள் தரமானதாக இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறப்பான ஆட்சியை மக்களுக்கு அளித்து, அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுகொண்டுள்ளார்.