மீண்டும் களைக்கட்ட துவங்கியது மீன்பிடி திருவிழா !!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோமங்களத்தில் 5000க்கும் மேற்பட்டோர் தற்போது மீன்பிடித் திருவிழாவில் கலந்து கொண்டு மீன்களை பிடித்து செல்கின்றனர்.

மீண்டும் களைக்கட்ட துவங்கியது மீன்பிடி திருவிழா !!

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை இலுப்பூர், பொன்னமராவதி திருமயம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக் காலம் முடிந்து பின் அப்பகுதி கிராமங்களில் உள்ள கண்மாய் மற்றும் குளங்களில் சாதி, சமூக பாகுபாடுகளைக் கடந்து ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக மீன்பிடித்த விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் பல்வேறு கிராமங்களில் மீன்பிடித் திருவிழாக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின் விமர்சியாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று  இலுப்பூர் அருகே உள்ள  கோமங்களம் குளத்தில்  காலை முதலே நடைபெற்று வரும் மீன்பிடி திருவிழாவில் மக்களின் ஆராவாரத்துடனும் மகிழ்ச்சியுடன் பங்கேற்று மீன்பிடித்து வருகின்றனர். இதுபோன்று மீன்பிடி திருவிழாக்கள் நடத்தப்படுவது மூலம் அப்பகுதி கிராமங்களில் சமூக ஒற்றுமை கடைபிடிக்கப்படுகிறது.

ஒரு ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மழை காலங்களில் குளங்களில் நிரம்பும் நீரில் அந்தந்த பகுதி நிர்வாகிகள் மீன் குஞ்சுகளை வாங்கி குளத்தில் விடுவதும் நீர்வற்றியவுடன் அந்த மீன்களை ஊர் பொதுமக்களை நல்ல நாள் நேரம் பார்த்து ஒரே நாளில் பிடித்துக்கொள்ள பாரம்பரிய மீன்பிடி திருவிழாவின் நோக்கமாகும்.

இன்று நடைபெறும் மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கச்சா, கூடை, வலை, பரி உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை கொண்டு நாட்டு வகை மீன்களான விரால், கெண்டை, கெளுத்தி, குறவை உள்ளிட்ட மீன்களை மகிழ்ச்சியுடன் பிடித்து செல்கின்றனர். ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.