அடேங்கப்பா... சென்னை ட்ராபிக் போலீஸின் அபராதத் தொகை இத்தனை கோடியா?

சென்னை போக்குவரத்து காவல் துறையினரின் அபராதத் தொகை வசூல் கடந்த ஆண்டு இரு மடங்காக உயர்ந்து 66 கோடியை தொட்டுள்ளது.

அடேங்கப்பா... சென்னை ட்ராபிக் போலீஸின் அபராதத் தொகை இத்தனை கோடியா?

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் முந்தைய ஆண்டைவிட அபராத வசூலில் இரு மடங்கு வருவாயை சென்னை போக்குவரத்து காவல்துறை ஈட்டியுள்ளது. 2019 ஆண்டு வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை 33.39 கோடி ரூபாய் இருந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு மட்டும் சென்னை போலீசாரால் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை 66.31 கோடி ரூபாய் என காவல் துறை தலைமையகம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளைக் கணக்கிடுகையில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை போக்குவரத்து காவல் துறையால் விதிக்கப்படும் அபராதத் தொகை அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு 24.13 கோடி இருந்த அபராத வசூல் 2017-ல் 25.58 கோடியாகவும், 2018-ல் 27.83 கோடியாகவும், 2019-ல் 33.39 கோடியாகவும் உயர்ந்துள்ளதாக காவல் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல மாநிலம் முழுவதிலும் போக்குவரத்து விதிமீறல்களுக்காக வசூலிக்கப்படும் அபராதத் தொகையானது கடந்த 2019 ஆம் ஆண்டு 165.81 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2020 ஆம் ஆண்டு அந்த தொகையானது 31. 66 சதவிகிதம் அதிகரித்து 52.51 கோடி அதிக வருவாய் ஈட்டியதுடன், 218.32 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் போக்குவரத்து விதிமீறல்களுக்காக காவல் துறையால் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையானது 101.43 கோடி ரூபாய் இருந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு 50 சதவிகிதம் அதிகரித்து 155.60 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாகவும், பின் 2018 ஆம் ஆண்டு அது 118.18 கோடியாக குறைந்து அடுத்த 2019 ஆம் ஆண்டே மீண்டும் அதிகரித்து 165.81 கோடி ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டதாகவும், கடந்த 2020 ஆம் ஆண்டு அது மீண்டும் அதிகரித்து 218.32 கோடி ரூபாய் அபராதப் பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தலைமையகம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விகளுக்கு காவல்துறை தலைமையகம் இந்த பதிலை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.