பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து - தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறிய முதலமைச்சர்.. 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட உத்தரவு!!

நெல்லை மாவட்டத்தில் கத்தியால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும், பெண் காவல் உதவி ஆய்வாளரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து - தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறிய முதலமைச்சர்.. 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட உத்தரவு!!

நெல்லை மாவட்டம் பழவூரில் உள்ள உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா நேற்று நடைபெற்றது. சுத்தமல்லி  காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தநிலையில், இன்று அதிகாலையில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசாவுக்கும்  பேனர் வைக்கும் தொழில் செய்து வரும் ஆறுமுகம் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், பேனரை கழற்றுவதற்காக வைத்திருந்த கத்தியால் உதவி ஆய்வாளரை ஆறுமுகம் குத்தியுள்ளார்.

சக காவலர்கள் விரைந்து வந்து உதவி ஆய்வாளரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். கத்தியால் குத்திய ஆறுமுகம் கைது செய்யப்பட்டார். விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன், வாகன சோதனையின் போது குடிபோதையில் வந்த ஆறுமுகத்திற்கு உதவி ஆய்வாளர் மார்கரெட் அபராதம் விதித்ததும், அந்த ஆத்திரத்தில் தற்போது கத்தியால் குத்தியதும் தெரிய வந்தது.  இதுகுறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் காவல் உதவி ஆய்வாளரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். தெரசாவுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட முதலமைச்சர், நிவாரண நிதியில் இருந்து உடனடியாக ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்.