பிளாட் பார்மில் பாய்ந்த மின்சார ரயில்.. நடந்தது எப்படி? - ஓட்டுனர் பகீர் வாக்குமூலம்!

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில், ரயில் ஓட்டுனர் பிரேக் பிடிப்பதற்கு பதில் கவனக்குறைவாக ஆக்சிலேட்டரை அழுத்தியதே விபத்து ஏற்பட காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிளாட் பார்மில் பாய்ந்த மின்சார ரயில்.. நடந்தது எப்படி? -  ஓட்டுனர் பகீர் வாக்குமூலம்!

கடந்த ஞாயிற்று கிழமை, சென்னை கடற்கரை ரயில் நிலைய  பணிமனையிலிருந்து 1-வது நடைமேடைக்கு வந்த மின்சார ரயில், திடீரென தடம் புரண்டு நடைமேடை மீது ஏறியது.

பலத்த சத்தத்துடன் ரயில் நடைமேடையில் மோதியதால், அங்கிருந்த பயணிகள் அலறியடித்தபடி ஓடினர். இந்த விபத்தில் ரயிலை ஓட்டி வந்த பவித்ரன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், விபத்துக்கான காரணம் அறிய ரயில்வே அதிகாரிகள், ஓட்டுனர் பவித்ரனை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் பிரேக் பிடிக்காததால் விபத்து நேர்ந்ததாக கூறியிருந்தார்.

இந்தநிலையில் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில்,  பிரேக்கிற்கு பதிலாக  ஆக்சிலேட்டரை அழுத்தியதை பவித்ரன் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே அவர் மீது கவனக்குறைவாக ரயிலை இயக்கி விபத்து ஏற்படுத்தியதாக வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், ரயில்வே துறையின் விசாரணை அறிக்கைக்கு பின்னர்,   பவித்திரன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவருக்கு மனநலம் சார்ந்த பரிசோதனையும் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.