மாலை முரசு செய்தியின் எதிரொலி ...நன்றி தெரிவித்த பொது மக்கள்...

மாலை முரசு செய்தியின் எதிரொலி ...நன்றி தெரிவித்த பொது மக்கள்...

மாலை முரசு செய்தி வெளியீட்டின் காரணமாக தூய்மையான பள்ளி சுற்றுப்புறம்,பள்ளி சுற்றி தேங்கி இருந்த குப்பைகளை அகற்ற வழி செய்த மாலை முரசு செய்திக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

சென்னை பெரம்பூர் அடுத்துள்ள பள்ளி சாலையில் பல ஆண்டுகளாக பழமை வாய்ந்த பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளியில் வியாசர்பாடி ,பெரம்பூர் போன்ற சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.பள்ளி வளாகத்தின் வெளிப்புறம் ஏறக்குறைய 10 பெரிய அளவிலான குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அங்கே குப்பைகளை நீண்ட நாட்களாக கொட்டி வந்துள்ளதாக புகார் எழுந்தது.

அதிகப்படியான குப்பைகளின் தேக்கத்தால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு பள்ளியில் பயிலும் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் நோய் தொற்று ஏற்படக்கூடிய அபாய சூழ்நிலை நிலவியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் மாலை முரசு செய்திகள் சார்பில் இந்த குப்பைகளை அகற்ற வேண்டும் என்று செய்தி வெளியிடப்பட்டது.


அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை இங்கே வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டிகளை உடனடியாக துப்புரவு பணியாளர்கள் அகற்றி அந்த பகுதியில் கிருமி நாசினி மற்றும் ப்ளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்தனர்.மீண்டும் இன்று காலை அங்கே  இருந்த அனைத்து குப்பைகளையும் குப்பை அள்ளும் இயந்திரங்கள் மூலமாக தொடர்ச்சியாக சுத்தப்படுத்தும் பணியில் மேற்பட்ட மாநகராட்சி மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆகையால் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்வதற்கு உதவிய மாலை முரசு சேனலுக்கு பொதுமக்கள் சார்பாக நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.குப்பை தொட்டிகளை அகற்றிய பின் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படாமல் உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.அதேபோல் இன்று ஒரு நாள் மட்டும் சுத்தம் செய்வதனை நிறுத்தி விடாமல் தொடர்ச்சியாக இந்த பகுதியை தூய்மையாக வைத்திருக்க மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளனர்.