சிவகாசியை சேர்ந்த குடும்பத்தினருக்கு ஜாதி மதம் அற்றவர்கள் என சான்றிதழ் வழங்கிய வட்டாட்சியர்!

சிவகாசியை சேர்ந்த குடும்பத்தினருக்கு ஜாதி மதம் அற்றவர்கள் என சான்றிதழ் வழங்கிய வட்டாட்சியர்!

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த குடும்பத்தினரை சாதி மதம் அற்றவர்கள் என வட்டாட்சியர் அறிவித்துள்ளார். சிவகாசி மேற்கு பகுதி டிவிஎஸ் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருக்கு ஷர்மிளா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த மாதம் கார்த்திகேயனும், ஷர்மிளாவும் சாதி மதம் அற்றவர்கள் என சான்றிதழ் பெற்றனர்.

இந்நிலையில், தங்களது 4 வயது மற்றும் 2 வயதுடைய மகன்களுக்கு சாதி மதம் அற்றவர்கள் என சான்றிதழ் கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தனர். இதனை அறிந்த வருவாய் துறை அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்து, தாங்கள் இப்படி ஒரு சான்றிதழ் யாருக்குமே இதுவரையில் வழங்கவில்லை என விண்ணப்பம் கொடுத்த கார்த்திகேயனிடம்   தெரிவித்துள்ளனர்.

இதனைக் கேட்ட கார்த்திகேயன் இதுவரை இந்தியாவில் 7 பேரும், அதிலும் குறிப்பாக தமிழகத்தில் 6 நபர்களும், இதுபோன்ற சாதி -மதம் மற்றவர்கள் என்ற சான்றிதழ் பெற்றுள்ளதாக ஆதாரத்துடன் வருவாய் துறையினரிடம் தகவல் கூறியுள்ளார்.

அவர்களிடம் விசாரணை நடத்திய பின்பு வட்டாட்சியர் லோகநாதன், இரு குழந்தைகளுக்கும் சாதி மதம் அற்றவர்கள் என சான்றிதழ் வழங்கினார்.