வடக்கு வங்ககடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி 48 மணி நேரத்தில் வலுப்பெறக் கூடும்...

வடக்கு வங்ககடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

வடக்கு வங்ககடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி  48 மணி நேரத்தில் வலுப்பெறக் கூடும்...

வடக்கு வங்ககடல் அதனை ஒட்டிய ஒடிசா  மற்றும் மேற்கு வங்க கடற்கரை ஒட்டி உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே பகுதியில் நீடித்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் அது ஆழ்ந்த காற்றழுத்தப் பகுதியாக வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

இதன் விளைவால், தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள்,  நீலகிரி, கோயம்புத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சென்னை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை  பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மன்னார் வளைகுடா, தெற்கு வங்கக் கடல், மத்திய வங்கக் கடல் பகுதிகள், கேரளா, கர்நாடக, கோவா கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் அரபிக்கடல் பகுதிகளில்  இன்று முதல் 17-ம் தேதி வரை  மணிக்கு  45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.