இறந்தவர் சடலத்தை வாய்க்காலில் தூக்கிச் செல்லும் அவலநிலை...

பேராவூரணி அருகே வாய்க்காலில்  இறங்கி இறந்தவர்சடலத்தை தூக்கிச் சென்று இறுதிச் சடங்கு செய்யும் அவலநிலை.

இறந்தவர் சடலத்தை வாய்க்காலில் தூக்கிச் செல்லும் அவலநிலை...

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே வாய்க்காலில் தண்ணீரில் இறங்கி, சடலத்தை தூக்கிச்செல்லும் நிலை உள்ளதால் இப்பகுதி பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள வீரியங்கோட்டை கிராமம் ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் ராக்கன். முன்னாள் ராணுவ வீரர். இவரது மகன் மகாலிங்கம் (வயது 50) விவசாயி. இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு உடல்நலக்குறைவால் இறந்து போனார். இந்நிலையில் அவருடைய இறுதிச் சடங்கு திங்கள்கிழமை மாலை நான்கு மணிக்கு நடைபெற்றது. 

வீரியங்கோட்டை ஆதிதிராவிடர் தெருவில் இருந்து முடச்சிக்காடு செல்லும் சாலையில் உள்ள ஆதிதிராவிடர்களுக்கான மயானத்திற்கு செல்லும் பாதையின் குறுக்கே கல்லணை கால்வாயின் கிளை பாசன வாய்க்கால் உள்ளது. இதில் தற்போது தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் சடலத்துடன் உறவினர்கள் வாய்க்காலில் இறங்கி அதனை கடந்து மறுபுறம் சென்று மகாலிங்கம் உடலுக்கு இறுதி நிகழ்ச்சிகள் செய்தனர்.