அதிகாலையில் காருக்குள் சிலிண்டர் வெடித்து விபத்து.. 6 தனிப்படைகள் அமைப்பு - டிஜிபி சைலேந்திர பாபு

கோவையில் நடந்த கார் வெடி விபத்து சம்பவத்தை விசாரிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.

அதிகாலையில் காருக்குள் சிலிண்டர் வெடித்து விபத்து.. 6 தனிப்படைகள் அமைப்பு - டிஜிபி சைலேந்திர பாபு
கோவை உக்கடத்தில் அதிகாலையில் காரில், சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளனது. இதில் காரிலிருந்த நபர் உயிரிழந்தார்.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு  கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
 
முதற்கட்ட விசாரணையில், வெடி விபத்தில் உயிரிழந்தவர் உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், அவர் பழைய துணி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும், உயிரிழந்த ஜமேசா முபினிடம் கடந்த 2019-ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் விசாரணை நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து அவரது வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அதில், நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வேதி பொருட்கள் சிக்கியுள்ளன. அத்துடன் அவரது செல்போனை மீட்டுள்ள காவலர்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
 
இதற்கிடையில் தமிழகத்தை மீண்டும் கலவர பூமியாக மாற்றத் துடிக்கும் சமூக விரோதிகளிடமிருந்து மக்களைக் காக்கும் பொறுப்பு காவல்துறையிடம் உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார்.
 
இந்த நிலையில், வெடிவிபத்து நிகழ்ந்த இடத்தில் காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இச்சம்பவம் குறித்து புலன் விசாரணை நடைபெறுவதாக தெரிவித்தார். மேலும், காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தடயவியல் துறை இயக்குநர் தலைமையில் சம்பவ இடத்தில் ஆய்வுகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.