அறிக்கை தாக்கல் செய்யும்படி மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு  உத்தரவிட்ட நீதிமன்றம் ?

அறிக்கை தாக்கல் செய்யும்படி மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் ?

மதுபான விற்பனை உரிம நிபந்தனைகளை கிளப்கள், ஹோட்டல்கள் பின்பற்றுகின்றனவா என்பது குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published on

தமிழ்நாடு மதுபான விற்பனை உரிம விதிகளின்படி, மது விற்க உரிமம் பெற்ற கிளப்கள், ஹோட்டல்கள் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டும் மது விற்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனைகளை மீறி, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பல கிளப்கள், ஹோட்டல்களில் மதுபானங்கள் வழங்கப்படுவதாகவும், உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கும் கிளப்களில் மதுபானங்கள் வழங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேஷ் பாபு என்பவர், உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கிளப்கள், ஹோட்டல்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி அதிகாலை 3 மணி வரைக்கும் மதுபானங்கள் வழங்கப்படுவதாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.உரிமம் பெற்றுள்ள இந்த கிளப்கள், ஹோட்டல்களில் திடீர் ஆய்வு நடத்துவதுடன், விதிமீறும் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கும்படி, தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் புகழேந்தி மற்றும் லட்சுமி நாராயணன்   அமர்வில்  விசாரணைக்கு வந்த போது, கிளப்கள் மற்றும் ஹோட்டல்கள் உரிம நிபந்தனைகள்படி செயல்படுகின்றனவா   என ஆய்வு செய்யும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, கிளப்கள், ஹோட்டல்களில் உரிம நிபந்தனைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரு வாரங்கள் தள்ளிவைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com