காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த காதல்ஜோடி....

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடியை சேர்த்து வைத்த போலீசார், அவர்களுடைய பெற்றோருடன் சமரசமாக பேசி அனுப்பி வைத்தனர். 

காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த காதல்ஜோடி....

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார், இவர் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் சொந்தமாக ஜேசிபி வைத்து தொழில் செய்து வந்துள்ளார். இதற்கிடையில் சதீஷ்குமாருக்கும் வேதாரண்யம் பகுதியை சேர்ந்த அருணாவிற்கும் காதல் ஈர்ப்பு ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். 

இந்நிலையில் இவர்களுடைய காதல் விவகாரம் அருணாவின் வீட்டிற்கு தெரிய வந்துள்ளது. இதனால் இருவரையும் பெற்றோர்கள் பிரித்து வைத்துவிடுவார் என அஞ்சிய காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட காக்கங்கரை பகுதியில் உள்ள ஜம்புநதி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

அதன்பின்னர் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து தஞ்சம் அடைந்துள்ளனர். அதன்பிறகு இருவீட்டாரையும் வரவழைத்த போலீசார், காதலர்கள் இருவரும் 18 வயது பூர்த்தியானவர்கள் என்பதால் இருவரின் பெற்றோர்களிடமும் சமரசம் பேசி, காதலர்களை சேர்த்து வைத்து பின்பு  பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர்.