கைதிகளை அடித்து துன்புறுத்தியதாக வழக்கு...! தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்..!

கைதிகளை அடித்து துன்புறுத்தியதாக வழக்கு...! தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்..!

சிறையில் கைதிகளை அடித்து துன்புறுத்துவதாகக் கூறி, கடலூர் சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

பத்திரிகையாளரும், யூ டியூபருமான சவுக்கு சங்கர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், கடலூர் சிறையில் தான் அடைக்கப்பட்டிருந்த போது அதே சிறையில் ஒன்பது கைதிகள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் உள்ளிட்டோர் இணைந்து அவ்வப்போது அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

அந்த ஒன்பது கைதிகளையும் பொது சிறைக்கு மாற்றக்கோரியும், சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் உள்துறை செயலாலர் அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால்  தனது மனுவை பரிசீலிக்க உள்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டுமெனவும் கோரியிருந்தார்.  

இந்த மனு, இன்று நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பு வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, இந்த வழக்கானது, பாதிக்கப்பட்ட நபர்களால் அல்லாமல் மூன்றாம் நபரால் தொடரப்பட்டுள்ளதாலும், இந்த விவகாரம் தொடர்பாக பொதுநல வழக்கு வேண்டுமானால் தாக்கல் செய்யலாம் என தெரிவித்தார். 

தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணைக் குழு மற்றும் சம்மந்தப்பட்ட மாவட்ட நீதிபதிகளும் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் நிலையில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது என கேள்வி எழுப்பிய நீதிபதி, மனு குறித்து தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.

இதையும் படிக்க : அமைச்சரானதும் முதல் கையெழுத்து...எதுக்கு தெரியுமா?