சரக்கு ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்... 2 பேர் பரிதாப உயிரிழப்பு...

கோபிசெட்டிபாளையம்  அருகே உள்ள திங்களூரில்  சரக்கு ஆட்டோ மீது டவேரா கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு வாகன ஓட்டுநர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்  3 பேர் படுகாயமடைந்தனர்.

சரக்கு ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்... 2 பேர் பரிதாப உயிரிழப்பு...

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள திங்களூர் சுப்பையான்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகன்குமார். இவருக்கு திருமணமாகி சுப்புலட்சுமி என்ற மனைவியும் சிவன் சபரி என்ற 6 வயது மகனும் சுஜயா ஸ்ரீ என்ற 3 வயது மகளும் உள்ளனர்.

ஜெகன்குமார் வாடகை கார் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இன்று ஜெகன் குமார் தனது காரில் வேலுமணி, தமிழ்ச்செல்வன், சுரேஷ் உள்ளிட்ட  3 பேருடன் திங்களூர் அருகே சென்று கொண்டு இருந்தார்.

அப்போது புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையை  சேர்ந்த களியபெருமாள் என்பவர், தனியார் நிறுவனத்தின் சரக்கு ஆட்டோவில் திங்களூர் புளியங்காடு அருகே சென்று கொண்டிருந்த போது இரு வாகனங்களும்  நேருக்கு நேர் மோதியது.

இதில் சரக்கு ஆட்டோ ஓட்டுநர் களியபெருமாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த நிலையில் இருந்த டவேரா கார் ஓட்டுநர் ஜெகன் குமார், வேலுமணி, தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 4 பேரும் வாகனங்களில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதில் சிகிச்சை பலனின்றி ஜெகன்குமார் உயிரிழந்தார். விபத்து குறித்து திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் டவேரா கார் ஓட்டுநர் அதிவேகமாக சென்று சரக்கு ஆட்டோ மீது மோதியது தெரிய வந்தது.