பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு காரணம்  என்ன..? விமர்சனம் செய்யும் ப.சிதம்பரம்...

இடைத் தேர்தல்களில் தோல்வி  அடைந்ததன் காரணமாக, பெட்ரோல்-டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளதாக, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு காரணம்  என்ன..? விமர்சனம் செய்யும் ப.சிதம்பரம்...

எண்ணெய் விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு காங்கிரஸ் அரசு வழங்கியது. அதை தினந்தோறும் நிர்ணயிக்கும் உரிமையை பாஜக அரசு வழங்கியது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்ததன் எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வந்தன.

இதனால் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100 ஐ கடந்தது. சில மாநிலங்களில் ரூ.120 வரை விற்பனை ஆகிறது. சரக்கு போக்குவரத்துக்கு முக்கியமானதாக விளங்கும் டீசலும் லி்ட்டர் 100 ரூபாய்க்கும் மேல் பல மாநிலங்களில் உயர்ந்தது. வியாபாரிகள், கனரக வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சரக்கு கட்டண உயர்வால் பொருட்களின் விலையும் உயர்ந்தது. இதனால் நடுத்தர மக்கள், சாமானிய மக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர். எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வந்தன.

இந்நிலையில் பெட்ரோலிய பொருட்களின் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரும் கோரிக்கை வந்தது. அதை மத்திய அரசு ஏதேதோ காரணம் சொல்லி தட்டி கழித்து வருகிறது. கடுமையான எதிர்ப்பு காரணமாக, சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக பல இடங்களில் தோல்வியை தழுவியது. இதற்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வுதான் காரணம் என்கிற விமர்சனம் எழுந்தது.

இதையடுத்து, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 5 மற்றும் 10 ரூபாய் வீதம் குறைத்து, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இது குறித்து விமர்சனம் செய்துள்ள ப.சிதம்பரம், 30 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் தான் இந்த பெட்ரோல்-டீசல் விலை குறைப்புக்கு காரணம் என கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மக்களின் உணர்வுகளை உணர்ந்து அவர்களின் துயரத்தை போக்குவதற்காக பெட்ரோல்-டீசல் விலை மீதான வரி குறைத்துள்ளதாகவும், தாங்கள் செய்ததை நீங்கள் விமர்சனம் செய்கிறீர்கள் என்றால் அதனை தாங்கள் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.