குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விபத்துக்குள்ளான பேருந்து...!!

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த பேருந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. 

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விபத்துக்குள்ளான பேருந்து...!!

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் ஏற்றுமதி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் ஆவடி, அயப்பாக்கம், பருத்திப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தனியார் பேருந்து மூலம் அழைத்து வரப்படுகின்றனர்.

இவ்வாறு அயப்பாக்கத்தில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிகொண்டு வந்த தனியார் பேருந்து, கலைவாணர் நகர் சாலை வளைவில் கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்ந்து எதிரே வந்த கார் மீது மோதி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில்  3 வீடுகளும், தேநீர் கடையும் இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் பேருந்தில் இருந்த பெண் ஊழியர்கள் ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.