விஜய் மக்கள் இயக்கம் பிப்ரவரி மாதமே கலைக்கப்பட்டு விட்டது...சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் எஸ்.ஏ சந்திரசேகர் தகவல்

விஜய் மக்கள் இயக்கம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே கலைக்கப்பட்டு விட்டதாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் எஸ்.ஏ சந்திரசேகர் பதில்மனு தாக்கல் செய்துள்ளார்.   

விஜய் மக்கள் இயக்கம் பிப்ரவரி மாதமே கலைக்கப்பட்டு விட்டது...சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் எஸ்.ஏ சந்திரசேகர் தகவல்

நடிகர் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ சந்திரசேகர் மற்றும் அவரது தாயார் ஷோபா ஆகியோர் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கினர். விஜய் அரசியலுக்கு வருவதற்கான ஆரம்பப் புள்ளிதான் என அப்போதே கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்துக்கும் தனக்கும் எந்தவித  தொடர்பும் இல்லை எனக் கூறிய நடிகர் விஜய் தனது ரசிகர்கள் யாரும் அதில் இணைய வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். மேலும் தனது பெற்றோருக்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார்.

விஜய் மக்கள் இயக்கம் 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்த நிலையில் இந்த வழக்கு மிகுந்த கவனம் பெற்றது. இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் கடந்த பிப்ரவரி மாதமே கலைக்கப்பட்டு விட்டதாகவும் அதன் பொறுப்பாளர்கள் அனைவரும் விலகி விட்டதாகவும் எஸ்.ஏ சந்திரசேகர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளார்.

எனினும் தாங்கள் விஜய் ரசிர்களாக தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எஸ்.ஏ சந்திரசேகரின்  பதில் மனுவை ஏற்றுக்கொண்ட உரிமையியல் நீதிமன்றம் இது தொடர்பாக நடிகர் விஜய் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.