காவிரி நீர் உரிமையைப் பெறுவதில் தமிழக அரசு எந்த அளவுக்கும் சென்று போராடும் - மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

காவிரி நீர் உரிமையைப் பெறுவதில் தமிழக அரசு எந்த அளவுக்கும் சென்று போராடி, மாநிலத்தின் உரிமையை நிலை நாட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

காவிரி நீர் உரிமையைப் பெறுவதில் தமிழக அரசு எந்த அளவுக்கும் சென்று போராடும் - மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

இதுகுறித்து காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், மேகதாது அணை கட்டும் நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு நடத்திவரும் சட்டப் போராட்டங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். 

மேலும், இதுகுறித்து 4 வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் உள்ளதையும், அண்மையில் பிரதமருக்கு அவரச கடிதம் எழுதியுள்ளதையும் முதலமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார். 

காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டும் திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என்று ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் பேசியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்கு உள்ளபோது அதுபற்றி விவாதிக்கப்படும் என்று கூறுவது சட்டவிரோதமானது என்றும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் குழு டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், கர்நாடக அரசின் அழுத்தத்திற்கு மத்திய அரசு பணிந்துவிடாமல், கூட்டாட்சியின் மாண்பை காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.  

காவிரி நீர் உரிமையைப் பெறுவதில் தமிழக அரசு எந்த அளவுக்கும் சென்று போராடும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.