ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச்செயலாளர் தீர்மானத்தை யாராலும் ரத்து செய்ய முடியாது - ஓபிஎஸ்!

ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச்செயலாளர்  தீர்மானத்தை யாராலும் ரத்து செய்ய முடியாது - ஓபிஎஸ்!

மக்கள் மன்றத்தை நாடி செல்ல படை புறப்பட்டு சென்று விட்டதாகவும், விரைவில் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாகவும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

அதிமுக பொதுக்குழு வழக்கில் நேற்றைய தினம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் கடந்தாண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தது. இதன்மூலம், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தொடர்வார் என்றானது. ஆனால், இந்த தீர்ப்பு ஓபிஎஸ் தரப்புக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், உச்சநீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு பின்னடைவு இல்லை எனவும், இந்த தீர்ப்பிற்கு பின் தான் தொண்டர்கள் எழுச்சியோடு இருக்கிறார்கள் என்று கூறிய அவர், மக்களை நாடி செல்லும் நிலையில் உள்ளதாகவும், மக்களிடம் நிச்சயம் நியாயம் கேட்போம் எனவும் கூறினார்.

எம்.ஜி ஆர். ஜெயலலிதா உயிரை கொடுத்து 50 ஆண்டு காலம் அதிமுகவை காப்பாற்றியுள்ளதாக கூறிய அவர், அவர்கள் வகுத்து கொடுத்த சட்ட விதியை காப்பாற்ற போராடி வருவதாகவும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச்செயலாளர் என தீர்மானம் நிறைவேற்றியதை ரத்து செய்ய யாருக்கும் உரிமை இல்லை எனவும் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க : ஆளுநருக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்த முத்தரசன்...!

கூவத்தூரில் நடந்தது போல், கட்சியை கைப்பற்ற வேண்டும் என நினைக்கிறார்கள் என்று குற்றம்சாட்டிய அவர், அதிமுக தொண்டர்களால் உருவான கட்சி எனவும், மக்கள் மன்றத்தை நாடி செல்ல படை புறப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சுற்றுப்பயணம் உறுதியாக விரைவில் தொடங்கும், மாவட்டம் வாரியாக மக்களை சந்திக்க உள்ளதாகவும் கூறியவர், என்னையும், சசிகலாவையும் அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என இ.பி.எஸ் கூறுவதற்கு, அவர் தாத்தா ஆரம்பித்த கட்சியா? என கேள்வி எழுப்பினார். மேலும் ஆணவத்தின் உச்சத்தில் இ.பி எஸ் உள்ளதாகவும் விமர்சித்தார்.

இனி தீர்ப்பை எங்கு பெற வேண்டுமோ அங்கு சென்று பெறுவோம் என கூறிய அவர், கூடிய விரைவில் சசிகலாவை சந்திப்பேன் என்றும், மார்ச் மாதம் இறுதிக்குள் முப்பெரும் விழா நடத்தப்படும் எனவும் உறுதிப்பட தெரிவித்தார்