எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் ஊழல் வழக்கு.. வழக்கை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!!

எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலை துறை டெண்டர் ஊழல் வழக்கை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் ஊழல் வழக்கு.. வழக்கை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!!

எடப்பாடி பழனிசாமி டெண்டர் முறைகேடு:

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018ஆம் ஆண்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

4,800 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு:

அதில், தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களை, தமிழக முதலமைச்சராக பதவி வகித்த எடப்பாடி பழனிசாமி, தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும் வழங்கியதன் மூலம்  4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சிபிஐ வழக்கு பதிவு:

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், முதலமைச்சராகப் பதவி வகித்த பழனிசாமி மீதான இந்த குற்றச்சாட்டு குறித்து வெளிப்படைத்தன்மையுடன் விசாரிக்க வேண்டியிருப்பதால், இந்த புகார் குறித்து சிபிஐ விசாரித்து, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என கடந்த 2018ஆம் ஆண்டில் உத்தரவிட்டது.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு:

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2018ஆம் ஆண்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

வழக்கை விரைந்து விசாரிக்க:

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள நிலையில், வழக்கை விரைந்து விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வில் தமிழக அரசு வழக்கறிஞர் ரஞ்சித்குமார் இன்று முறையீடு செய்தார். அப்போது,  அதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, வழக்கு விரைந்து பட்டியலிடப்படும் என உறுதி அளித்துள்ளது.