பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டவரையே திருமணம் செய்த நபர்..! தண்டனையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்!!

திருமணத்திற்கு முன் சிறுமியை கர்ப்பமாக்கி 2 குழந்தைகள் பிறக்க காரணமானவர், சிறுமி 18 வயதை கடந்தவுடன் அவரை மணந்து மகிழ்வுடன் வாழ்ந்து வருவதால், உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அவரை விடுவித்துள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டவரையே திருமணம் செய்த நபர்..! தண்டனையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்!!

திருப்பூரைச் சேர்ந்த தண்டபானி என்பவர் தனது உறவினரான 14 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த தண்டபானியால் தனது 15வது வயதில் கர்ப்பம் தரித்துள்ளார் சிறுமி. தொடர்ந்து குழந்தையை பெற்றெடுத்த அவர், தனது 17வது வயதில் 2ம் குழந்தைக்கு தாயானார். 

இதற்கிடையே தண்டபானி மீது போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்த நிலையில், திருப்பூர் மகளிர் நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. இந்த தீர்ப்பையும் எதிர்த்து இறுதி முயற்சியாக தண்டபானி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

நீதிபதி நாகேஸ்வரராவ் அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், பாலியல் வன்கொடுமையின் கீழ் கைது செய்யப்பட்டவரை விடுவிப்பது தவறான முன்உதாரணமாக அமைந்து விடும் என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில், 18 வயது பூர்த்தியடைந்த பாதிக்கப்பட்ட பெண்ணை, தண்டபானி திருமணம் செய்ததை அடுத்து இருவரும் மகிழ்வுடன் வாழ்ந்து வருவதாக தண்டபானி தரப்பில் வாதிடப்பட்டது. தினக்கூலியான அவர் சிறைக்கு செல்லும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர் குழந்தைகளுடன் சிரமத்துக்கு ஆளாகக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

தண்டபாணி செய்தது தவறாகவே இருந்தாலும் தற்போது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதால் அதில் பிரச்சனையை உருவாக்க விரும்பவில்லை என நீதிபதி தெரிவித்தார். எனவே உச்சநீதிமன்றத்தின் 142வது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்வதாக உத்தரவிட்டார். 

இளம்பெண்ணை நன்றாக பார்த்துக்கொள்ள அவர் தவரும் பட்சத்தில் தீர்ப்பு மாற்றியமைக்கப்படும் எனவும் எச்சரித்த நீதிபதி வழக்கை முடித்து வைத்தார். பாலியல் வன்கொடுமை என பதியப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவரையே திருமணம் செய்து மகிழ்வுடன் வாழ்ந்ததால், அரிதிலும் அரிதாக உச்சநீதிமன்றம் தன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையை ரத்து செய்தது தற்போது பேசும் பொருளாகியுள்ளது.