"தேசப்பற்றைப் பற்றி பேசுவதற்கு  பா.ஜ.க -வுக்கு அருகதை இல்லை..! ...." - துரை வைகோ

தேசப்பற்றை போதிக்கின்ற பா.ஜ.க   மதவாத சக்திகள்  அதற்கு முரணாக செயல்படுகின்றன.....

"தேசப்பற்றைப் பற்றி பேசுவதற்கு  பா.ஜ.க -வுக்கு  அருகதை இல்லை..! ...."  -  துரை வைகோ

டெல்லி ஜந்தர் மந்தரில் பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளான மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்திற்கு நீதி வழங்க வேண்டும் என துரை வைகோ அறிக்கை விடுத்திருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டதாவது, 

"இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் ஆறு முறை பா.ஜ.க எம்.பி-யுமான பிரிஜ் பூஷண் ஷரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்த போதும், ஹரியானா மாநிலத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் சந்தீப் சிங் மீது தடகள பயிற்சியாளரான பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்த போதும் நான்  கடந்த ஜனவரி 25 ஆம் நாள் ஆவடியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள்  கூட்டத்தில் கண்டித்துப் பேசியிருந்தேன்.

மேலும், கடந்த ஜனவரி 18-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கிய மகளிர் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், 'இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும் உத்தரப்பிரதேச பா.ஜ.க எம்.பி-யுமான பிரிஜ் பூஷண் ஷரண் சிங் தொடர்ந்து இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுக்கிறார். உடல், மனரீதியாக வீராங்கனைகளைத் துன்புறுத்துகிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கோரி தர்ணாவில் ஈடுபட்டார். 

அவருக்கு ஆதரவாக பஜ்ரங் புனியா, ஷாக்ஷி மாலிக் என அடுத்தடுத்து மல்யுத்த வீராங்கனைகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டங்கள் பற்றி இந்திய பிரதமரிடமும் ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சரிடமும் முறையிட்டனர்.

இதைத் தொடர்ந்து, ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீராங்கனைகளைச் சந்தித்து பேசினார். இதன் தொடர்ச்சியாக, பிரிஜ் பூஷண் ஷரண் சிங் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழுவை, மூத்த குத்துச்சண்டை வீராங்கனை எம்.சி.மேரி கோம் தலைமையில் கடந்த ஜனவரி 23 அன்று அமைத்தார். விசாரணையை நான்கு வாரங்களுக்குள் முடிக்குமாறு குழுவுக்கு உத்தரவிடப்பட்டது. இருந்தும், இந்த குழு எந்த முழுமையான விசாரணையும் முறையாக நடத்தவில்லை. FIR கூட பதிவு செய்யப்படவில்லை. 

இந்நிலையில் ஏழு மல்யுத்த வீராங்கனைகள்  உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்கள் 'மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்திருக்கும் புகார்கள் மிகத் தீவிரமானவை – விசாரிக்கப்பட வேண்டியவை' என்றும் 'பிரிஜ் பூஷண்  உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை தாக்கல் செய்யவும்' உத்தரவிட்டார். 

இதன் பிறகே டெல்லி காவல்துறையினர் பிரிஜ் பூஷண்  மீது போக்சோ (The Protection of Children from Sexual Offences Act 2012) சட்டத்தின் கீழ் மைனர் சிறுமியின் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒரு வழக்கும்,  பெண்களின் மாண்பை களங்கப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக மற்ற வீராங்கனைகள் அளித்துள்ள புகார்கள் அடிப்படையில் இரண்டாவது வழக்கும்   பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்து சிறையில் அடைக்கக் கோரி வினேஷ் போகத், பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் ஆகியோர் தலைமையில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் கடந்த 23-ந்தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகினற்னர். 'பிரிஜ் பூஷன் கைது செய்யப்படும் வரை போராட்டக் களத்தை விட்டு வெளியேற மாட்டோம்' என்பதில் உறுதியாக உள்ளனர்.

இந்நிலையில், சில சக்திகள் அரசியல்வாதிகளின் பின்பலத்தோடு போராட்டத்தைச் சீர்குலைக்க முயன்று வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த மல்யுத்த வீராங்கனைகள் போராட்ட இடத்திற்கு படுக்கைகளை கொண்டு வர முயன்றபோது அவர்களைத் தாக்கியுள்ளனர்.  இது தொடர்பாக 25 பேர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த காவல்துறையின் கொடூரத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தாங்கள் சர்வதேச, இந்தியப் போட்டிகளில் பெற்ற பதக்கங்களையும் சான்றிதழ்களையும் சிறப்பு சலுகைகளையும் திருப்பித்தரப் போவதாக அறிவித்துள்ளனர்.

இவ்வாறிருக்க, ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ரா, மூத்த கிரிக்கெட் வீரர் கபில் தேவ், ஒலிம்பிக் வீரர் அபினவ் பிந்த்ரா, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் பிரபல நடிகர் சோனு சூட் போன்றவர்கள் அநீதிக்கு எதிராகப் போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு  ஆதரவு தெரிவித்துள்ளார்கள். சரத் கமல் 10 முறை சீனியர் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர். சர்வதேச ஆடவர் டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர்களின்  தரவரிசையில் 39-வது இடத்தில் உள்ள இவர், மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

’நமது விளையாட்டு வீரர்கள் தெருவில் நீதி கோரிப் போராடுவதைப் பார்ப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவர்கள் நமது நாட்டை பிரதிநிதித்துவப் படுத்த கடுமையாக உழைத்து நம்மை பெருமைப்படுத்தியவர்கள்' என்று நீரஜ் சோப்ராவும். இந்திய மல்யுத்த நிர்வாகத்தில் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நமது விளையாட்டு வீரர்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்துவது மிகுந்த கவலையளிக்கிறது' என்று துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ராவும் தங்களது ஆதரவையும் கவலையையும் தெரிவித்துள்ளனர்.

மேலும், கிரிக்கெட் வீரர் கபில் தேவ், தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் மல்யுத்த வீராங்கனைகளின் படத்தைப் பகிர்ந்து, 'அவர்களுக்கு எப்போதாவது நீதி கிடைக்குமா?'என்று வினவியுள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவர் சாக்ஷி மாலிக். டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர் பஜ்ரங் புனியா. 

இப்படி, சர்வதேச போட்டிகளில் இந்தியாவிற்காக பதக்கங்களை வென்று புகழ் ஈட்டித் தந்தவர்களே  அநீதிகளுக்கு எதிராக வீதிக்கு வந்து போராட வேண்டிய அவல நிலை யுள்ளது பா.ஜ.க. ஆளும் ஆட்சியில். சமூகத்தில் மிகவும் பின்தங்கிய பிரிவைச் சார்ந்த இவர்கள் ரத்தத்தை வியர்வையாக சிந்தி நாட்டுக்காகப் போராடி பதங்கங்களை வென்றவர்கள். இவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் சர்வதேச போட்டிகளில் பங்கு பெற இயலாத அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

தேசப்பற்றை போதிக்கின்ற பா.ஜ.க   மதவாத சக்திகள்  அதற்கு முரணாக செயல்படுகின்றனர். எனவே தேசப்பற்றைப் பற்றி பேசுவதற்கு  அவர்கள் அருகதை அற்றவர்கள்.தமிழ்நாட்டு முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்கள் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்ட நியாயங்களை மற்ற மாநில முதல்வர்களுக்கும் எடுத்துக் கூறி தேசிய அளவில் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.  ஒவ்வொரு தமிழனும் இந்தியனும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீராங்கனைகளுக்கு உறுதுணையாக இருப்போம்."

 இவ்வாறு அறிக்கையில் தெரிவித்திருந்தார். 

இதையும் படிக்க     }  படங்களை படங்களாக பாருங்கள்..! ' தி கேரளா ஸ்டோரி' படம் குறித்து - வானதி சீனிவாசன்...!