ஆளுநர் தமிழக அரசுக்கு போட்டி அரசியல்வாதியாக செயல்படுகிறார் - கே.பாலகிருஷ்ணன்

ஆளுநர்  தமிழக அரசுக்கு போட்டி அரசியல்வாதியாக செயல்படுகிறார் - கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான மாநில மாநாடு நெல்லையில் நடைபெறுவதையொட்டி, அதில் கலந்து கொள்ள வந்துள்ள அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ரெட்டியார்பட்டியில் உள்ள அவர்களது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

50 இடங்களில் பேரணி

அப்போது அவர் கூறியதாவது, “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தடை செய்யப்பட்ட நேரத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு ஒரே நேரத்தில் 50 இடங்களில் நடத்துவதற்கு அனுமதி கேட்டதால் தமிழக அரசு சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அதற்கு அனுமதி மறுத்தது. அவர்கள் உயர்நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றனர். சில வழிகாட்டு நெறிமுறைகள் அதற்காக வகுக்கப்பட்டது அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் உச்ச நீதிமன்றம் சென்று தற்போது அனுமதி பெற்றுள்ளனர் . ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி கொடுத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது கவலை அளிப்பதாக உள்ளது.

ரம்மி தடை சட்டத்திற்கு அனுமதி - 40 உயிர்கள் போயிருக்காது

ஜனநாயக உரிமை என்பதற்காக அதனை யார் வேண்டுமானாலும் கெட்ட நோக்கத்திற்கு பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. இந்த அனுமதி வழங்கப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது . தமிழகத்தில் அரசியல் சட்ட விதிகளை மீறி ஆளுநர் செயல்படுகிறார். போட்டி அரசியல்வாதி போன்று தமிழக அரசுக்கு எதிராக அவர் செயல்பாடுகள் உள்ளது . தற்போது ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளார் . இதனை முன்கூட்டியே ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு அனுமதி கொடுத்திருந்தால் தமிழகத்தில் 40 உயிர்கள் போயிருக்காது.

மேலும் படிக்க | காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்க மறுத்தால்...! தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை

ஆளுநர் செயல்பாடுகள் வன்மையான கண்டனத்திற்குரியது. நடுநிலையோடு செயல்பட வேண்டிய அவர் ஒன்றிய அரசுக்கு ஆதரவாக அவர் செயல்படுகிறார். மக்கள் நலபணியாளர்கள் பணியை ஒவ்வொரு முறையும் அதிமுக ஆட்சி அமையும் போது எல்லாம் ரத்து செய்து வருகிறது. ஒரு அரசு ஒரு திட்டத்தை வகுக்கும் போது மற்றொரு ஆட்சி அமையும் நிலையில் அதில் குறைபாடுகள் இருந்தால் சரி செய்யவேண்டும் மாறாக ரத்து செய்யகூடாது. தமிழக அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கவேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க | மனைவியை ஆபாச படம் எடுத்து வெளியிடுவேன் என மிரட்டிய கணவனுக்கு ............நீதிமன்றம் அதிரடி