அக்னிபத் திட்டம்: முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையே எதிரொலிக்கும் மாறுபட்ட கருத்து..!

அக்னிபத் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ஆளுநர் ஆர்.என்.ரவியும் இருவேறு கருத்துக்களை தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அக்னிபத் திட்டம்: முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையே எதிரொலிக்கும் மாறுபட்ட கருத்து..!

இந்திய ராணுவத்தில் தற்காலிகமாக 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் அக்னிபத் திட்டத்தை கடந்த 14ம் தேதி மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்திற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் தீவிரமடைந்து வரும் போராட்டங்கள், தற்போது தென்மாநிலங்களுக்கும் பரவியுள்ளது. 

இந்நிலையில், அக்னிபத் திட்டம் தொடர்பாக தமிழக ஆளுநரும், முதலமைச்சரும் இருவேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். 

தூத்துக்குடியில் சுதந்திரப் போராட்ட வீரர் வஉசியின்  150ஆவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அக்னிபத் திட்டம் ஒரு புரட்சிகரமான திட்டம் என்று வரவேற்பு தெரிவித்திருந்தார். இளைஞர்களின் நிலையை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றும் அக்னிபத் திட்டம், தன்னம்பிக்கையை, சுய ஒழுக்கத்தை மேம்படுத்தும் என்று கூறியிருந்தார். இத்திட்டத்தை தவறாகப் புரிந்து கொண்டு இளைஞர்கள் அரசு சொத்துக்களை சேதப்படுத்துவதாகவும் ஆளுநர் தெரிவித்திருந்தார்.

ஆனால், அக்னிபத் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்னிபத் எனும் தேச நலனுக்கு எதிரான திட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், முன்னாள் ராணுவ அதிகாரிகள் இந்தத் திட்டத்தை எதிர்த்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், நாட்டின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, லட்சக்கணக்கான இளைஞர்களின் ராணுவப் பணி எனும் லட்சியத்தைச் சிதைக்கும் இந்த அக்னிபத் திட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கை உள்ளிட்டவற்றில் முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையே மாறுப்பட்ட நிலைப்பாடு இருந்து வருகிறது. 

தற்போது அக்னிபத் திட்டம் தொடர்பாகவும் இருவேறு கருத்துகளை தெரிவித்திருப்பதன் மூலம், தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான கொள்கை மோதல் தீவிரமடைந்துள்ளது.