உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் நிலை என்ன? அவர்களின் எதிர்கால நலனை தமிழ்நாடு அரசு காக்கும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

உக்ரைனில் இருந்து தமிழ்நாடு திரும்பிய மாணவர்களின் எதிர்கால நலனைக் காக்க தமிழ்நாடு அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் நிலை என்ன? அவர்களின் எதிர்கால நலனை தமிழ்நாடு அரசு காக்கும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சட்டப்பேரவையில் நேரம் இல்லா நேரத்தில், உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் எதிர்கால நிலை குறித்து அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தனர்.

அதற்கு பதிலளித்துப் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசின் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய சிறப்புக்குழு மூலம் ஆயிரத்து 890 மாணவர்கள் தமிழ்நாட்டுக்கு பத்திரமாக மீட்டு கொண்டு வரப்பட்டு உள்ளதாகக் கூறியதோடு, அவர்கள் அனைவரும் தங்கள் கல்வியைத் தொடர நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்ததையும் சுட்டிக்காட்டினார்.

மாணவர்களுக்கு 20 ஆலோசகர்கள் மூலம் உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், இந்தியாவிலோ அல்லது உக்ரைன் நாட்டு பாடத்திட்டத்தை ஒத்த மற்ற நாடுகளிலோ, அவர்கள் படிப்பைத் தொடர ஒன்றிய அரசு வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுப்பதாகவும் கூறினார். மேலும், ருமேனியா, செக் குடியரசு, போலந்து, கஜகஸ்தான் உள்ளிட்ட உக்ரைன் பாடத்திட்டத்தை ஒத்த நாடுகளில் இந்திய மாணவர்கள் படிப்பைத் தொடர்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளதாகக் கூறிய அமைச்சர், உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என்றும், மாணவர்களின் எதிர்கால நலனை காக்கும் என்றும் உறுதி அளித்தார்.