”முதலமைச்சர் நேரடியாக பார்வையிட இருப்பதால் தரமாக சாலைகளை போடவேண்டும்” - அதிகாரிகளுக்கு அமைச்சர் வலியுறுத்தல்

”முதலமைச்சர்  நேரடியாக பார்வையிட இருப்பதால் தரமாக சாலைகளை போடவேண்டும்” - அதிகாரிகளுக்கு அமைச்சர் வலியுறுத்தல்

அக்டோபர் மாதம் 15 ஆம் தேதிக்குள் நெடுஞ்சாலைத்துறை சாலைகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அனைத்து சாலைகளையும் முதல்வர் நேரடியாக ஆய்வு செய்ய உள்ளதால் அதிகாரிகள் சாலைகளை தரமானதாக அமைக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியிலுள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் பொதுப்பணிகள் , நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,. கடந்த 19-ஆம் தேதி முதல்வர் முன்னிலையில் நடைபெற்ற  ஆலோசனை கூட்டத்தில்,   மழைக்காலத்திற்கு முன்பு சாலைப்பணிகள் முடிக்கவேண்டும்  என முதல்வர் அறிவுறுத்தியதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் தெரிவித்ததாவது:-
“நெடுஞ்சாலைகளில்  மின்சார கம்பி வடங்கள், குடிநீர் குழாய்கள் பதிப்பதை விரைந்து முடித்து சாலைப்பணிகளை முடிக்கவேண்டும் என்றும்,  அடுத்த மாதம் 15 ஆம் தேதிக்கு முன்பாக அனைத்து பணிகளை முடிக்க வேண்டும் என தெரிவித்திருப்பதாக கூறினார்.

எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இவ்வாண்டு பணிகள் விரைவாக நடைபெற்றுள்ளதாகவும், அதிகளவில் ஒப்பந்ததாரர்களுக்கு கொடுப்பதினால் பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதாகவும் கூறினார். அதனால் பணிகள் சிறப்பாகவும் விரைவாகவும் நடைபெறுகிறது எனக் கூறினார்.

மேலும், “நெடுஞ்சாலைத்துறை சாலைகளில் பள்ளங்கள் பழுது ஏற்பட்டால் அதனைத்தெரிவித்தால் உடனடியாக சரிசெய்வதற்கு  செயலி ஒன்றை தயார் செய்வோம் என்று சட்டமன்றத்தில் தெரிவித்தோம்”, அதன்படி இச்செயலி மூலமாக படங்கள் எடுத்து அனுப்புவதன் மூலம் குறிப்பிட்ட கால அளவிற்குள் புகார்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க முடியும்”,எனத் தெரிவித்தார்.

மேலும், “பத்திரிக்கைகளில் முடிவுற்ற பணிகள், சிறு சிறு புகார்கள் குறித்தும் தவறாக செய்தி வெளியாகியுள்ளது.  நானே நேரடியாக இது குறித்து பத்திரிக்கை அலுவலங்களில் பேசியுள்ளேன். இதற்கெல்லாம் முடிவுக்கட்டும் விதமாக இச்செயலி இருக்கும்.  ஐஐடி போன்ற நிறுவனங்களுடன் இணைந்து இச்செயலி விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. அதேபோல் மழைக்காலத்திற்கு முன்பாக பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளோம்”,என்றார் .

இந்த ஆலோசனை கூட்டத்தில் துறையின் முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிக்க  | "ரயில் இயக்கத்தை தடுத்தால் 4 ஆண்டு சிறை" மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை!