கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் தாயாரிடம் தொலைபேசியில் பேசிய முதலமைச்சர்..!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் தாயாரிடம்  தொலைபேசியில் பேசிய முதலமைச்சர்..!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் தாயாரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய முதலமைச்சர் ஆறுதல் கூறியுள்ளார்.

மாணவி மரணம்:

கடந்த ஜூலை 13 ஆம் தேதி கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி பள்ளியின் 3 ஆம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. தங்களது மகளின் மரணத்தில் மரணம் இருப்பதாக பெற்றோர்கள் புகார் அளித்ததை அடுத்து மாணவியின் மரணம், மர்ம மரணமாக பதியப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

கலவரம்:

மாணவியின் மரணம் தொடர்பாக பள்ளியை முற்றுகை இட்ட போராட்டக்காரர்கள், பள்ளி கட்டிடங்கள் மற்றும் பள்ளி பேருந்துகளை எரித்ததால் பெரும் பதற்றம் நிலவியது. நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அந்த சம்பவம் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. 

நீதி கேட்டு வழக்கு:

தங்கள் மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் என மாணவியின் பெற்றோர் போராடி வருகின்றனர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பள்ளி ஆசிரியர்கள் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அன்பில் மகேஷ் நேரில் அஞ்சலி:

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள பெரிய நெசலூர் கிராமத்தில் உள்ள மாணவியின் வீட்டிற்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவெ.கணேசன் ஆகியோர் வியாழக்கிழமை இரவு நேரில் சென்று மாணவிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு மாணவியின் தாயாருக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.

முதலமைச்சர் ஆறுதல்:

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொலைபேசியில் தொடர்புகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், மாணவியின் தாயாரிடம் மாணவியின் மரணம் அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அப்போது கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்ததால் தொடர்புகொள்ள முடியவில்லை என வருத்தம் தெரிவித்தார்.

உங்களை போலவே நாங்களும்..

ஸ்ரீமதி எங்களுக்கும் மகள் தான் எனவும்  இந்த வழக்கில் தீர்ப்பு வருவதற்காக நீங்கள் எப்படி காத்துக் கொண்டிருக்கிறீர்களோ அதே போல் நாங்களும் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறோம் எனக் கூறியுள்ளார்.

திமுகவை சேர்ந்தவர்களானாலும்..:

மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். தவறு செய்தவர்கள் திமுகவை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். 

நேரில் சந்திக்க வேண்டும்: 

ஸ்ரீமதியின் தாய் முதலமைச்சரிடம் பேசும் போது தனது மகள் இறப்பு குறித்து உங்களை நேரில் பார்த்து எனது மனதில் உள்ளதை உங்களிடம்  பேச வேண்டுமென கோரிக்கை வைத்ததற்கு, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை நேரில் சந்திக்கலாம் எனக் கூறியுள்ளார்.