பிரதமருக்கு ஆங்கிலத்தில் வேண்டுகோள் வைத்த முதலமைச்சர்...அப்படியென்ன வேண்டுகோள்?!!

பிரதமருக்கு ஆங்கிலத்தில் வேண்டுகோள் வைத்த முதலமைச்சர்...அப்படியென்ன வேண்டுகோள்?!!

இந்தியாவுக்கே வழிகாட்டியாக தமிழகம் உள்ளதாக, திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமருக்கான நினைவு பரிசு:

பெங்களூரு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, விமானம் மூலம் மதுரை வந்த பிரதமர், அங்கிருந்து  ஹெலிகாப்டரில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டிக்கு வந்தடைந்தார். பிரதமரை, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஆகியோர் வரவேற்றனர்.  

அப்போது பொன்னியின் செல்வன் புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பை, பிரதமருக்கு நினைவு பரிசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

உற்சாக வரவேற்பு:

இதையடுத்து, சாலை மார்க்கமாக திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக் கழகத்திற்கு பிரதமர் புறப்பட்டார். அப்போது, சாலையின் இருபுறங்களிலும் திரண்ட மக்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமரும், திறந்த காரில் நின்றபடி, மக்களுக்கு உற்சாகமாக கையசைத்தார்.

திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த பிரதமருக்கு, நாதஸ்வரம், பறை போன்ற பாரம்பரிய வாத்தியங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பட்டமளிப்பு விழாவில், நாட்டுப் பண், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. 

முதலமைச்சர் உரை:

விழாவில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்று உரையை தொடங்கினார் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்.

தமிழ்நாட்டுக்கும் காந்திக்குமான உறவு:

குஜராத்தில் பிறந்து ஒற்றுமைக்காகவும் சமூக நல்லிணக்கத்துக்காகவும் உழைத்து தேசத்தந்தையாக போற்றப்படும் அண்ணல் காந்திக்கும் தமிழ்நாட்டிற்குமான தொடர்பு மிக மிக அதிகம் எனவும் தனது வாழ்நாளில் 26 முறை தமிழ்நாடு வருகை புரிந்த அண்ணல் காந்தி அவர்கள் தமிழை விரும்பி கற்றவர் எனவும் தெரிவித்தார் முதலமைச்சர்.

அரசியலில் காந்தியின் பெரும்பாலான மாற்றங்கள் தமிழ்நாட்டிலேயே நிகழ்ந்தது எனக் கூறினார் முதலமைச்சர்.  அதில் முக்கியமான நிகழ்வாக உயர் ஆடை அணிந்து அரசியலுக்கு வந்தவரை அரையாடை அணிய செய்தது தமிழ் மண் என முக்கியமான நிகழ்வை நினைவுகூர்ந்தார் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்.

தமிழ் மீதான பிணைப்பு:

தமிழ் மீதான ஈர்ப்பால் மு. க. காந்தி என தமிழில் கையெழுத்து போட்டவர் மகாத்மா காந்தி எனக் கூறியதோடு திருக்குறள் படிக்க வேண்டும் என்பதற்காகவே தமிழ் கற்க வேண்டும் எனக் கூறியவர் காந்தி என்பதை பெருமையாக கூறினார் முதலமைச்சர். 

மேலும், வட இந்தியர் அனைவரும் ஒரு தென்னிந்திய மொழி கற்க வேண்டும் அது தமிழாக இருக்க வேண்டும் எனக் கூறியவர் அண்ணல் காந்தி என்பதையும் இங்கு குறிப்பிட்டு கூறினார்.  அத்தகைய காந்தியடிகளின் பெயரால் அமைந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் என்ற சார்பில் வரவேற்கிறேன் எனப் பேசினார்.

காந்தி கிராம் பெருமை:

கல்வியாலேயே ஒருவரை முன்னேற்ற முடியும் என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டு இந்த பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது எனக் கூறினார் முதலமைச்சர்.

மேலும், இந்தியா கிராமங்களில் வாழ்கிறது; கிராமங்களாலேயே இந்தியா வளர்ச்சியடையும் எனக் கூறிய காந்தியடிகளின் சீடர்களாகிய ஜி. ராமச்சந்திரன் மற்றும் அவரது துணைவியார் எஸ். சௌந்திரம் அவர்களால் தொடங்கப்பட்ட கிராமிய பயிற்சி நிறுவனம் இன்று நிகர் பல்கலைக்கழகமாக உயர்ந்து நிற்கிறது எனத் தெரிவித்தார்.  

தொடர்ந்து பேசிய அவர் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களின் மாணவர்களும் வெளிநாட்டு மாணவர்களும் இங்கு உயர்கல்வியையும் ஆராய்ச்சி கல்வியையும் பயின்று வருகின்றனர் என்பதை அறியும் போது மகிழ்ச்சியடைகிறேன் எனவும் இந்த   பல்கலைக்கழகத்திற்காக 207 ஏக்கர் நிலம் வழங்கிய சின்னாளம்பட்டி புரவலர்களை மனமார நினைவுகூருகிறேன் எனவும் நெகிழ்ந்து பேசினார் முதலமைச்சர்.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு:

இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு எனக் கூறினார் முதலமைச்சர்.  மேலும் தமிழ்நாட்டில் கல்வி முன்னேற்றத்திற்காக தமிழ்நாட்டில் நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, கல்லூரிக் கனவு போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

ஆங்கிலத்தில் வேண்டுகோள்:

அதுவரை தமிழில் உரையாடிய முதலமைச்சர் பிரதமருக்கு புரிய வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் உரையை தொடர்ந்தார்.  அது முக்கியமான கோரிக்கையாக இருந்ததே அதற்கான காரணம்.

கல்வி என்பது அனைவரது வாழ்விலும் முக்கியமான ஒன்று எனவும் கல்வியாலேயே நாடு முன்னேறும் எனவும் கூறினார் முதலமைச்சர்.  மேலும் கல்வி என்பது எவராலும் திருட முடியாது எனவும் ஒருவரது கனவை கல்வியாலேயே பெற முடியும் எனவும் தெரிவித்தார் முதலமைச்சர்.

அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் போது கல்வி மாநில பட்டியலிலேயே வைக்கப்பட்டிருந்தது எனவும் தற்போது அது பொதுப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார் முதலமைச்சர்.

அவசர காலங்களில் மட்டுமே கல்வி பொதுப்பட்டியலில் வைக்கப்பட வேண்டும் என அரசியலமைப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்த முதலமைச்சர் கல்வி முன்னேற மாநிலத்தின் ஒத்துழைப்பே மிக அவசியம் எனவும் அதனால் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் எனவும் பிரதமருக்கு மேடையிலேயே கோரிக்கை வைத்தார் முதலமைச்சர் மு. க். ஸ்டாலின்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் தமிழில் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்து கூறியதோடு கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையை முடித்தார் முதலமைச்சர்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலை....காங்கிரஸ் அதிருப்தி!!!