கோவை கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் திறம்பட செயல்பட்ட காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
திறமையுடன் செயல்பட்ட காவல் துறையினர்:
கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த 23-ம் தேதி நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிவிபத்தில் சிக்கி ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இச்சம்பவத்தில் திறமையுடன் துப்பு துலக்கி குற்றவாளிகளை 12 மணி நேரத்திற்குள் கோவை மாநகர காவல்துறையினர் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்தனர்.
பாராட்டி சான்றிதழ் வழங்கிய முதலமைச்சர்:
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பத்திரிக்கையாளர்கள் 41 பேருக்கு மாதம் ரூபாய் 10,000 ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கினார். இதேபோல், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் ஈவுத் தொகையான 9 கோடியே 62 லட்சத்து 10 ஆயிரத்து 330 ரூபாய்க்கான காசோலையினை முதலமைச்சரிடம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார்.
தொடர்ந்து, கோவை கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் திறம்பட செயல்பட்ட காவல் ஆய்வாளர் கல்யாண கந்தசாமி, சிவகுமார் உட்பட காவலர்கள் 15 பேருக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி தனது பாராட்டினை தெரிவித்தார்.
முன்னதாக, கோவை சம்பவத்தில் தமிழக காவல்துறையினர் மெத்தன போக்காக செயல்பட்டதாக கூறி தமிழக பாஜக அண்ணாமலை குற்றம்சாட்டி வரும் நிலையில், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்வது போன்று கோவை சம்பத்தில் திறம்பட செயல்பட்ட காவல்துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி தனது பாராட்டினை தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.