செல்லப்பிராணியை நினைத்து கண்கலங்கிய தலைமை நீதிபதி...

சாலையோர செல்ல பிராணிகளை பராமரிக்க அனைவரும் முன்வர வேண்டும்; அவைகள் நம்மிடம் அன்பை மட்டுமே எதிர்பார்க்கிறது என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பனர்ஜி கண்ணீர் மல்க பேச்சு.

செல்லப்பிராணியை நினைத்து கண்கலங்கிய தலைமை நீதிபதி...

உலக ரேபீஸ் நோய் தடுப்பு தினத்தையொட்டி சென்னை வேப்பரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் இலவச ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் முகாமினை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பனர்ஜி, மற்றும் மருத்துவர் ராணி கவுர் பனர்ஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

இந்நிகழ்வில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் செல்வகுமார், ஓமந்தூரர் அரசு மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ரேபீஸ் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஆன்லைன் கருத்தரங்கையும் தலைமை நீதிபதி தொடங்கி வைத்தார்.

அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி கூறுகையில், 

சீட்டுக்கட்டில் ஜோக்கர் இருப்பது சிறந்தது என்றும், அந்த சீட்டுக்கட்டுகளில் நாம் தான் ஜோக்கர்கள் என்றும் கூறினார். மேலும் கடந்த 16-18 மாதங்களாக விலங்கு போன்றவற்றுடனான வாழ்வை வாழ்ந்து வருகிறோம் என்று கூறிய அவர், விலங்குகளுக்கும், மரங்களுக்கும் மரியாதை அளிக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் தனது வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வை பகிர்ந்து கொண்டார். அப்போது அவரும், அவரது மனைவியும் கல்கத்தாவிலிருந்து சென்னைக்கு ஜனவரியில் சாலை வழியாக வந்தபோது, சாலையில் உள்ள செல்லப்பிராணிகள் தங்களுடன் வந்ததாக குறிப்பிட்டார். 

அதேபோல் குழந்தை போன்று அவர்கள் வளர்த்த செல்லப்பிராணியான நாய் 13.5 வயதில் சென்னை வந்தவுடன் இறந்ததாகவும், மனிதனோடு ஒப்பிட்டால் 92 வயதுக்கு சமம் என்று கண்ணீர் மல்க கூறினார். 

இந்நிலையில் செல்லப்பிராணி இறந்த பிறகு வளர்ப்பதற்கு நாய்களை நிறைய பேர் கொடுத்ததாகவும், அதனை வளர்க்காமல், தெருவோர நாய்களை பராமரித்து வருவதாக தெரிவித்தார்.

எனவே படித்தவர்கள் சாலையோர நாய்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என்றும், விலங்குகள் நம்மிடம் அன்பை எதிர்பார்க்கின்றது, ஆனால் அதை நாம் புரிந்துகொள்வதில்லை என்றும் கண்ணீருடன் பேசினார்.

அதுமட்டுமின்றி ரேபிஸ் நோய் குறித்து ஒருசிலருக்கு அச்சம் உள்ளதாகவும், அதுதொடர்பான வதந்திகளை புறக்கணித்து விட்டு, அதன் உண்மைகளை மக்கள் உணர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார், மாணவர்களுக்கு வெறிநாய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று இக்கருத்தரங்கம் நடைபெறுகிறது என்றார்.

மேலும் நாய் கடித்தால் அலட்சியமாக இல்லாமல் உடனடியாக நாமும் உரிய மருத்துவரை அணுக வேண்டும், அதே போன்று செல்ல பிராணிகளுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும். என்று கூறிய அவர்,

15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் தான் இதனால் அதிமாக பாதிக்கப்படுகின்றனர், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே பல போட்டிகளை நடத்தியுள்ளதாக கூறினார். 

வண்டலூரில் அனைத்து விலங்குகளும் தற்போது நலமுடன் உள்ளன, அங்கு ஒரு சில விலங்குகளுக்கு கொரோனா வந்த போது மனிதர்களுக்கு வழங்கப்படும் அதே சிகிச்சை முறையில் டோஸ்களை அதிகப்படுத்தி பராமரித்ததாகவும்,

வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கு கொரோனா வருமா என்பது குறித்து ஆய்வு மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை அதுகுறித்து உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறினார்.

கால்நடை மருத்துவ பட்டப்படிப்புற்கு கடந்த ஆண்டை விட 20-25% விண்ணப்பங்கள் அதிகமாக இந்தாண்டு பெறப்பட்டுள்ளது என்றும், தரவரிசை வெளியிடும் போது கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.