மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எந்த வகையிலும் மத்திய அரசு துணை போக கூடாது: துரைமுருகன் வலியுறுத்தல்

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகா மாநிலத்திற்கு எந்த வகையிலும் மத்திய அரசு துணை போக கூடாது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எந்த வகையிலும் மத்திய அரசு துணை போக கூடாது: துரைமுருகன் வலியுறுத்தல்

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான தமிழக அனைத்து கட்சி குழு, டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி, அ.தி.மு.க. சார்பில் ஜெயக்குமார், ம.தி.மு.க. சார்பில் வைகோ, ஜி.கே.மணி, பாலகிருஷ்ணன், திருமாவளவன், உள்ளிட்ட 13 பேர் பங்கேற்றனர். மேகதாது அணைக்கு எதிராக அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை வழங்கிய தமிழக குழு, அணை கட்டினால் தமிழகத்திற்கு நீர் ஆதாரம் பாதிக்கப்படும் என வலியுறுத்தியது.

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், மேகதாது அணைக்காக கர்நாடகாவின் திட்ட அறிக்கை முழுமையாக இல்லை என்றும், அணை கட்ட கர்நாடகாவுக்கு சாத்தியக்கூறு இல்லை எனவும் மத்திய அமைச்சர் கூறியதாக தெரிவித்தார். மேலும், மேகதாது அணைக்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி மற்றும் காவிரி பாயும் அனைத்து மாநிலங்களின் ஒத்துழைப்பு தேவை என குறிப்பிட்டுள்ள அவர், மேகதாது அணைக்கு எப்போதும் அனுமதி கிடைக்காது என மத்திய அமைச்சர் உறுதியளித்துள்ளதாக கூறினார்.

பூனைக்கும் தோழன்; பாலுக்கும் காவலன் என்பது போல, மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடும் போடுகிறதோ? என்ற ஐயம் ஏற்பட்டுள்ளதாக, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். வரும் நாடாளுடன்ற கூட்டத் தொடரில் இந்த பிரச்சனையை எழுப்ப போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதனிடையே, திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ள கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து, மேகதாது திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்க வலியுறுத்துவார் என கூறப்படுகிறது.