மகா தேரோட்டத்தை தொடர்ந்து...மகா தீபம் எப்போ? ஆவலுடன் பக்தர்கள்!!

மகா தேரோட்டத்தை தொடர்ந்து...மகா தீபம் எப்போ? ஆவலுடன் பக்தர்கள்!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் ஒரு பகுதியாக அண்ணாமலையார் மகா ரத தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 

மகா ரததேரோட்டம்:

நினைத்தாலே முக்தி அளிக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த மாதம் 27-ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொடியோற்றத்துடன் தொடங்கியது. இதன் 7-ஆம் நாளான நேற்று அண்ணாமாலையாரின் மகா ரததேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முதலில், சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்:

இந்த மகா ரததேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என பக்தி முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். 300 டன் எடை கொண்ட தேர், 4 மாட வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தை யொட்டி பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படிக்க: காலநிலையால் வரும் பாதிப்பு...உச்சி மாநாட்டில் அரசு செய்ய போவது என்ன?

மகா தீபம்:

தொடர்ந்து, கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகின்ற 6ம் தேதி  அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோவிலின் கருவறையில் பரணி  தீபமும், மாலை 6 மணிக்கு 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபமும் ஏற்றபட உள்ளது.

இந்நிலையில் மலை மீது ஏற்பட உள்ள தீபத்திற்கு தீப கொப்பறையில் 4500 கிலோ நெய் நிரப்பி சுமார் 1500 மீட்டர் காடா துணியை பயன்படுத்தி ஏற்றப்படும் மகாதீபம், தொடர்ந்து 11 நாட்கள் எரியும். அதன் பின்னர் தீப கொப்பரை அண்ணாமலையார் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு கொப்பரையில் இருந்து நெய் சேகரித்து அதனுடன் பல்வேறு மூலிகைகள் மற்றும் வாசனை திரவியங்கள் சேர்த்து ஆருத்ரா தரிசனத்தின் போது நடராஜருக்கு நெற்றியில் திலகமிட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். சிறப்பு மிகு இந்நிகழ்வானது வருகிற செவ்வாய் கிழமை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.