60 நாளில் கொரோனாவை விரட்டியடித்த ஸ்டாலினுக்கு நன்றி.! தீர்மானம் நிறைவேற்றிய முக்கிய கட்சி.!  

60 நாளில் கொரோனாவை விரட்டியடித்த ஸ்டாலினுக்கு நன்றி.! தீர்மானம் நிறைவேற்றிய முக்கிய கட்சி.!  

திமுக ஆட்சிக்கு வந்து அறுபதே நாட்களில் கொரோனா தொற்றை விரட்டியடித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம் திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ சாய் மஹாலில் நடைபெற்றது. மாநில செயலாளர் முஹம்மது நிஜாமுத்தீன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஏற்கனவே மாவட்ட தலைவராக இருந்த காயல் அகமது ஷேக் என்பவர் உயிரிழந்ததால்  யாஸீன் மௌலானா என்பவர் மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் அதன் தலைவர் மு க ஸ்டாலின் அவர்களை முதலமைச்சராக தேர்ந்தெடுத்தமைக்காக அனைத்து மக்களுக்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். 

மேலும் ஆட்சி பொறுப்பேற்ற 60 நாட்களில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி கொரோனா என்ற கொடிய நோயை விரட்டி அடித்து வெற்றி பெற்றதற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லி, திருத்தணி ஆகிய 4 சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர்களுக்கு பொதுக்கூட்டம் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும், தமிழக அமைச்சரவையில் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு அமைச்சர் பதவி வழங்கியிருப்பதற்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாகவும், சிறுபான்மை நல வாரியத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களை நியமித்ததற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதேபோல் வக்பு போர்டு மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம் ஆகிய வாரியங்களிலும் இஸ்லாமியருக்கு வாய்ப்பு வழங்கிட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல்களிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிட திமுக  வாய்ப்பளிக்க வேண்டுமென்றும் இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில செயலாளர் முகமது நிஜாமுதீன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.