நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள்- முதல்வர் ஆலோசனை  

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.  

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள்- முதல்வர் ஆலோசனை   

சென்னை தலைமை செயலகத்தில் காலை 11மணியளவில் நடைப்பெறும் ஆலோசனையில், அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியகருப்பன், தலைமை செயலாளர் இறையன்பு, துறை சார்ந்த செயலாளர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொள்ள உள்ளனர். தமிழகத்தில் புதிதாக உருவான மாவட்டங்களுக்கு வார்டு வரையறை பிரித்த பின் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டதால் கடந்த 2019ம் ஆண்டு புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை... அதன்பின், கொரோனா தாக்கம் காரணமாக தேர்தல் நடைபெறாமல் இருந்தது..இந்த நிலையில், அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டு 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த அக் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைப்பெற்றது.. இதில் திமுக 93% வெற்றியை பெற்றுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, அடுத்தகட்டமாக, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது..மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்..உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி நான்கு மாதங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய சூழல் உள்ளதால் முதலமைச்சர் தலைமையில் இன்று நடைப்பெறும் ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள், ஆயதப்பணிகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படும். மேலும், கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில், பணிகளை துரிதப்படுத்தி விரைவில் தேர்தல் நடத்துவதற்கான அறிவுரைகளை முதலமைச்சர் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.