முதற்கட்டத்தில் விடுபட்ட தகுதியானவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடக்கம்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் முதற்கட்டத்தில் விடுபட்ட தகுதியானவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கியது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது. அதன்படி, அறிஞர் அண்ணா பிறந்த நாளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து சுமார் ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க : மிசோரம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது...!

ஆனால், 50 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சுமார் 11 லட்சத்து 86 ஆயிரம்  பேர் முறையீடு செய்திருந்தனர்.

முறையீடு செய்யப்பட்டவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மேல்முறையீடு விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது. குறுஞ்செய்தி கிடைக்கப்பெற்ற குடும்பத் தலைவிகளுக்கு வரும் 10-ந்தேதி வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.