சென்னையில் தமிழ் வழி மருத்துவக் கல்லூரி விரைவில் தொடங்கும்...அமைச்சர் பேச்சு!

சென்னையில் தமிழ் வழி மருத்துவக் கல்லூரி விரைவில் தொடங்கும்...அமைச்சர் பேச்சு!

தமிழ் வழியில் மருத்துவம் படிப்பதற்கான, புதிய மருத்துவ கல்லூரி விரைவில் தொடங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

நவீன மருத்துவ உபகரணங்களை வழங்கினார்:

சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 லட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன மருத்துவ உபகரணங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வழங்கினார். அத்துடன் பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை மையங்களையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

ரேடியோ அலைவரிசை வலி நிவாரண சிகிச்சை மையம்:

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புற்றுநோய் மற்றும் முதுகு தண்டுவர பாதிப்பால் போராடுபவர்களுக்கு மாற்று சிகிச்சையாக ரேடியோ அலைவரிசை வலி நிவாரண சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார். இதேபோல், தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் இதுபோன்ற ரேடியோ அலைவரிசை வலி நிவாரண சிகிச்சை மையம் அமைய உதவ வேண்டும் என்று ரோட்டரி சங்கத்துக்கு கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார். 

இதையும் படிக்க: மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே தீவிரவாத தாக்குதல் என்று சொன்னேன்...!

தமிழ்வழி மருத்துவக் கல்லூரி :

தொடர்ந்து,  கடந்த ஆண்டு தமிழ் வழியில் மருத்துவ கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு வைத்ததாகவும், அதன்படி, தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் ஒரு கல்லூரி அமைத்து, தமிழ் வழியில் கல்வி கற்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும் தெரிவித்தார்.

ஆனால், முதலில் மருத்துவக் கல்லூரி இல்லாத இடங்களில் மருத்துவ கல்லூரி தொடங்கலாம் என முடிவு செய்து, அதன்படி   தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர்,  ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம்  உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் வேண்டுமென்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தோம். இந்த கோரிக்கை பரிசீலனையில் உள்ளதால், இந்த ஆறு மருத்துவ கல்லூரி வந்த பிறகு சென்னையில் ஒரு புதிய மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு அதில் தமிழ் வழி மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என தெரிவித்தார்.

முதலமைச்சர் வெளியிடுவார்:

மேலும், மூன்று மருத்துவ பேராசிரியர்கள் கொண்ட குழு முதலாண்டு மருத்துவ பாடப் புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்து வருகின்றனர். மொழிப்பெயர்க்கப்பட்ட பின்னர், முதலமைச்சர் அந்த புத்தகத்தை வெளியிடுவார் என மா.சுப்பிரமணியம் கூறினார்.