எந்தவகை கொரோனா வந்தாலும் அதனை தடுக்க தமிழகம் தயார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா வைரஸ் எந்த வகையில் வந்தாலும் அதனை தடுக்க தமிழகம் தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

எந்தவகை கொரோனா வந்தாலும் அதனை தடுக்க தமிழகம் தயார் -  அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் நடைபெற்றது. அப்போது, புதிய வகை கொரோனாவை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி பணிகள் குறித்து அதிமுக எம்.எல்.ஏ. விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினார்.

அதில், ஒமிக்ரான் வகை கொரோனாவை விட 7 மடங்கு வேகமாக பரவக்கூடிய XE வகை கொரோனா நாட்டின் சில மாநிலங்களில் பரவி வருவதாகவும், இதன் வேகம் ஜுன் மாதத்தில் உச்சம் பெறும் என தகவல் வெளியாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து, தடுப்பூசி போடும் பணியை விரைவுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்கும் போது தினசரி பாதிப்பு உச்சத்தில் இருந்ததாகவும், அதன்பின்னர், இரண்டாம் அலையும், மூன்றாம் அலையும் எதிர்கொள்ளப்பட்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் கூறினார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சர்வதேச விமானங்களில் வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு விமானத்திலும் 2 சதவீத பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் எந்த வகை கொரோனா வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறினார்.