
தமிழ்நாடு அரசின் புதிய பேருந்துகள் வாங்கும் திட்டத்துக்கு தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு ஜெர்மன் நாட்டு நிதியுதவியுடன் புதிதாக 4 ஆயிரம் பேருந்துகளை வாங்க இருப்பதாகவும், அதில் 10 சதவீத பேருந்துகள் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வசதியுடனும், 25 சதவீத பேருந்துகள் சக்கர நாற்காலி உதவியுடன் மாற்றுத் திறனாளிகளை ஏற்றும் வசதியுடனும் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை போன்ற பெருநகர சாலைகளில் இது சாத்தியமற்றது என்றும், எனவே புதிய பேருந்துகள் வாங்கும் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார். இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், புதிய பேருந்துகள் வாங்கும் திட்டத்துக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. அதே நேரம் அனைத்து பேருந்துகளும் தாழ்தள வசதியுடன் இருக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவின்படி பேருந்துகள் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும், வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.