தமிழகத்தில் முதல்முறையாக இ-பட்ஜெட்... கொரோனா நெகடிவ் இருந்தால் மட்டுமே அனுமதி... 

விவசாயிகள் பயன்பெறும் வகையில், முதல் முறையாக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தனியாக தாக்கல்

தமிழகத்தில் முதல்முறையாக இ-பட்ஜெட்... கொரோனா நெகடிவ் இருந்தால் மட்டுமே அனுமதி... 

தமிழக சட்டசபையில் முதன் முறையாக, இன்று காகிதமில்லா இ - பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக, அனைத்து எம்.எல்.ஏ.,க்கள் மேஜையிலும் கணினி பொருத்தப்பட்டுள்ளது. நிதியமைச்சர் வாசிக்கும் பட்ஜெட் உரை, கணினி திரையில் ஒளிரும். இது தவிர அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும், கையடக்க தொடுதிரை கணினி வழங்கப்பட இருக்கிறது.

தமிழக அரசின் 2021-2022ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை இன்று சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். மு.க.ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு தாக்கலாகும் முதல் நிதிநிலை அறிக்கை ஆகும்.  

கடந்த ஜூன் 21ம் தேதி 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நடைபெற்றது. அன்றைய தினம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அதில், விவசாயிகள் பயன்பெறும் வகையில், முதல் முறையாக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தமிழகத்தின் 2021-2022ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான பணிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.  தினசரி, ஒவ்வொரு துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடமும் அவர் ஆலோசனை நடத்தி வந்தார்.  இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 4ம் தேதி சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில், 2021-2022ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்வது குறித்து முடிவு செய்யப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் கூட்டம் இன்று காலை 10  மணிக்கு சென்னை, வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. சட்டப்பேரவையில் பங்கேற்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், சட்டப்பேரவை ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.  கொரோனா நெகடிவ் சான்றிதழ் இருப்பவர்கள் மட்டுமே சட்டப்பேரவை கூட்டத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் துறைக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.