கருத்தா பேசுனா போதுமா.. ஃபாலோ பண்ணமாட்டீங்களா? கமலுக்கு நோட்டீஸ் அனுப்பிய தமிழக சுகாதாரத்துறை

கொரோனா விதிமுறையை மீறி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கருத்தா பேசுனா போதுமா.. ஃபாலோ பண்ணமாட்டீங்களா? கமலுக்கு நோட்டீஸ் அனுப்பிய தமிழக சுகாதாரத்துறை

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதனிடையே அமெரிக்கா சென்று திரும்பிய அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் நவம்பர் 22ஆம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


 இந்தசூழலில் கமல் முழுமையாகக் குணமடைந்துவிட்டதாகவும், டிசம்பர் 4ஆம் தேதி முதல் அவர் தனது வழக்கமான பணியைத் தொடரலாம் என்றும் கமல் சிகிச்சை பெற்ற ராமச்சந்திரா மருத்துவமனை தெரிவித்தது. இதையடுத்து, கடந்த டிசம்பர் 4 மற்றும் 5ஆம் தேதி நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இதனால், சிகிச்சை முடிந்தும் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும் என்ற அரசின் விதிமுறைகளை மீறியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுதொடர்பான கேள்விக்குப் பதிலளித்துள்ள சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினாலும், 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே, கொரோனா விதிமுறையை மீறியது தொடர்பாக கமல்ஹாசனிடம் அரசுத் தரப்பில் விளக்கம் கேட்கப்படும் என்றார்.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வீடியோ ஒன்றை இன்று நேற்று வெளியிட்டுள்ள கமல், இந்தக் கோவிட் காலத்தில் உயிர் பயமின்றி நம் தோழர்கள் எப்படி பணிபுரிந்தார்களோ, அதே துணிச்சலுடன் ஆனால் மிகவும் ஜாக்கிரதையாக நீங்கள் பணி செய்யவேண்டும். உங்கள் நலன் எனக்கு மட்டுமல்ல, நம் நாட்டிற்கும் மிக முக்கியம். நீங்கள் இந்தத் தேர்தல் பணிகளில் ஈடுபடும்போது எல்லா விதமான ஆயத்தங்களும் அதாவது இந்தத் தொற்றுக்கு எதிரான தற்காப்புகளை நீங்கள் மேற்கொண்டே ஆக வேண்டும். இந்த தொற்று நீங்கிவிட்டது அல்லது போய்விடும் என்ற நம்பிக்கையில் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது என்பதற்கான முன்னுதாரணமாக நானே இங்கு நின்றுகொண்டிருக்கிறேன்.

நம்முடைய பலம், நம் தொண்டர்கள் தான். அவர்கள் ஆரோக்கியம் எனக்கு மிகவும் முக்கியமாகும். இந்தத் தேர்தல் வெற்றியை ஈட்டுவதற்கு உழைப்பு மட்டுமல்ல, முன் ஜாக்கிரதையும், தற்காப்பும் மிகவும் அவசியம். அதைச் செய்துகாட்டுவீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.