அனுமன் ஜெயந்தி விழா: நங்கநல்லூரில் சுவாமி தரிசனம் செய்த ஆளுநர்...!

அனுமன் ஜெயந்தி விழா: நங்கநல்லூரில் சுவாமி தரிசனம் செய்த ஆளுநர்...!

அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் நிலையில், தமிழக ஆளுநர் இன்று நங்கநல்லூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். 

நாமக்கல்:

மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அமாவாசையன்று அனுமன் அவதரித்ததால், அந்நாள் அனுமான் ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நாமக்கல் நகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு  அதிகாலையே ஒரு லட்சத்து 8 வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள்  கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதனைதொடர்ந்து, ஆஞ்சநேயருக்கு மஞ்சள், சந்தனம், பன்னீர், தயிர், பால், தேன், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட உள்ளது. 

திருவாரூர்:

அதேபோல், திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியை அடுத்த ஞானபுரி சங்கடஹர மங்கள மாருதி ஆலயத்தில் உள்ள 36 அடி ஆஞ்சநேயருக்கு  அரிசி மாவு, பால், தயிர், திரவியம், மஞ்சள், குங்கும், சந்தனம் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைப்பெற்றன. அபிஷேகங்களின் நிறைவாக ஆஞ்சநேயருக்கு தீபாரதனை காட்டப்பட்ட நிலையில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிக்க: தமிழ்நாட்டில் வரும் 25, 26ம் தேதிகளில் கனமழை எச்சரிக்கை...எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

திருவண்ணாமலை:

தொடர்ந்து, திருவண்ணாமலை, ஆரணி இரும்பேடு பகுதியில் அமைந்துள்ள 20 அடி உயரமுள்ள விஸ்வரூப பக்த ஆஞ்சநேயருக்கு ஐம்பதாயிரத்து ஒரு வடைகளால் மாலை அணிவித்து அனுமன் ஜெயந்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

ஆளுநர் சுவாமி தரிசனம்:

இந்நிலையில், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவிலான நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக, கோவிலுக்கு வருகைப்புரிந்த ஆளுநருக்கு கோயில் தரப்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. அத்துடன், ஆளுநர் வருகையையொட்டி கோயில் வளாகத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.