தமிழகத்தில் நீடிக்கும் அசாதாரண சூழல்...அவசர ஆலோசனையில் இறங்கிய இறையன்பு!

தமிழகத்தில் நீடிக்கும் அசாதாரண சூழல்...அவசர ஆலோசனையில் இறங்கிய இறையன்பு!

தமிழகத்தில் 2 நாட்களாக நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் தீ வைப்பு நிகழ்வுகளை தொடர்ந்து தமிழக தலைமைச் செயலாளர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

அடுத்தடுத்த தீ வைப்பு சம்பவங்கள்:

சென்னை, கோவை, பொள்ளாச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம், ஈரோடு என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பாஜக அலுவலகம், அக்கட்சி நிர்வாகிகளின் வீடுகள், கார் மற்றும் கடைகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வருகிறது. மேலும், தீ வைப்பு சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகிறது. 

அவசர ஆலோசனை கூட்டம்:

இந்நிலையில், தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச்செயலாளர் இறையன்பு தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. காணொலி காட்சி மூலம் நடைபெறும், இந்த கூட்டத்தில், உள்துறை செயலாளர் பணிந்தர ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமைச்செயலகத்தில் பங்கேற்றனர்.  இதேபோல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் உயர் காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் காணொலி காட்சி மூலம் பங்கேற்றுள்ளனர். 

இதையும் படிக்க: தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்...காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்...!

முன்னதாக, கோவை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்களை தொடர்ந்து கோவை மாநகர உளவுப் பிரிவு மற்றும் சிறப்பு உளவுப் பிரிவுகளுக்கான புதிய உதவி ஆணையர்களை நியமித்து டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். அதன்படி, கோவை மாநகர சிறப்பு உளவுப் பிரிவு உதவி ஆணையராக இருந்து வந்த பார்த்திபன், உளவுப் பிரிவு உதவி ஆணையராகவும், கோவை மாநகர சிங்காநல்லூர் சரக உதவி ஆணையராக இருந்த அருண், சிறப்பு உளவு பிரிவு உதவி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.