தாமாக முன்வந்து நிலங்களை ஒப்படைக்க வேண்டும்... ஆக்கிரமிப்பாளர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்...

கீழ்ப்பாக்கத்தில் காஞ்சி ஏகாம்பர நாதர் கோவிலுக்கு சொந்தமான 1970 சதுர அடி ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கங்களை இந்து சமய அறநிலையத்துறை மீட்டுள்ளது. ஆக்கிரமிப்பாளர்கள் தாமாக முன்வந்து கோவில் நிலங்களை ஒப்படைக்க அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தாமாக முன்வந்து நிலங்களை ஒப்படைக்க வேண்டும்... ஆக்கிரமிப்பாளர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்...
காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவிலுக்கு சொந்தமாக கீழ்ப்பாக்கம் ஈ.வே.ரா சாலையில் 1970 சதுர அடி நிலம் கடந்த 2014ம் ஆண்டு முதல் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. 10 கோடி மதிப்பு மிக்க இந்த நிலத்தில் 9 வணிக கடைகள் செயல்பட்டு வந்தது. இதற்கு முன் ஒப்பந்த வாடகையில் இந்த நிலத்தை பயனாளர் ஒருவர் லீஸ்க்கு எடுத்திருந்த நிலையில் 2014ம் ஆண்டு அவரது இறப்பிற்கு பிறகு சிலர் அறநிலையத்துறைக்கு வாடகை கொடுக்காமல் 7 வருடங்களாக கடை நடத்தி வந்தனர்.
இது தொடர்பாக அறநிலையத்துறை சார்பில் நோட்டிஸ் அனுப்பப்பட்டும், கடைக்காரர்கள் காலி செய்யாத நிலையில், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று காலை தொடங்கினர். முதலில் கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள், ஜெ.சி.பி இயந்திரம் மூலம் கடைகளை இடித்தனர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மற்றும் துறை ஆணையர் குமரகுபரர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.  
 
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு,
 
இந்து சமய அறநிலை பொறுத்தவரை ஆக்கிரமிப்புகளை அகற்ற தயாராக இருக்கிறது. திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்களை ஏற்கனவே இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளோம்.
 
ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் , நீங்களே முன்வந்து நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். திமுக ஆட்சி பதவிக்கு வந்ததில் இருந்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் மீட்பட்டுள்ளன.  திருக்கோயிலுக்கு வருமானம் ஈட்டும் முயற்சியை அறநிலை துறை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. கோவில் நிலங்களில் கட்டப்பட்டுள்ள கடைகளில் வாடகை பணம் வசூலிப்பது குறித்து சட்ட ரீதியான முயற்சிகள் நடத்தப்படும்.
 
வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் ஏழை எளிய மக்கள் பொருளாதார ரீதியாக பயன்பெறும் வகையில் இந்த நிலத்தில் நிறுவனங்கள் கட்டப்படும்.  தமிழ்நாடு முழுவதும் இருக்கும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை பட்டியலிட மண்டல துணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.