பதிவுத்துறையில் புகார் மனு அளித்த 2 நாட்களில் நடவடிக்கை எடுங்க…  

பதிவுத்துறையில் குறை தீர்க்கும் முகாம் மூலம் பெறப்படும் புகார் மனுக்கள் மீது 2 நாட்களில் நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  

பதிவுத்துறையில் புகார் மனு அளித்த 2 நாட்களில் நடவடிக்கை எடுங்க…   

தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது, பதிவுத்துறையில் பொதுமக்களிடம் இருந்து பதிவு தொடர்பாக அதிகளவில் புகார் மனுக்கள் பெறப்பட்டு வருவதால், திங்கட்கிழமை தோறும் பதிவு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படும் என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். அதன் படி, அனைத்து மாவட்ட மற்றும் மண்டலங்களில் வாரந்தோறும் திங்கட்கிழமை பதிவு குறை தீர்க்கும் முகாம் நடத்தப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், திங்கட்கிழமை காலை 10 மணி முதல் ஒரு மணி வரை நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் தங்கள் மனுக்களை வழங்கலாம் என்றும், முகாம்கள் தொடர்பான பதிவேடுகள் மற்றும் பதிவுக்குறிப்புகள் தெளிவாகவும் சீராகவும் பராமரிக்க வேண்டும் எனவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,விசாரணை செய்ய வேண்டிய புகார் மனுக்கள் மீது 15 நாட்களுக்குளாகவும், உடனடியாக தீர்வுகாண வேண்டிய மனுக்கள் மீது 2 நாட்களுக்குள்ளாகவும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போலி ஆவணப்பதிவு புகார் இருப்பின் சட்டப்பூர்வ தேதிக்குள் நடவடிக்கை மேற்கொள்ளவும், பதிவேடுகள் மற்றும் பதிவுத்துறை புகார்கள் அதிகம் வரும் அலுவலங்களில் பதிவுத்துறை துணைத்தலைவர் ஆய்வு மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவு குறை தீர்க்கும் முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கை தொடர்பாக மாதந்தோறும் பதிவுத்துறை தலைவருக்கு அறிக்கை அளிக்கவும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி உத்தரவிட்டுள்ளார்