முறைகேடாக பல கோடிகளை குவித்த சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர்... பாண்டியனின் மனைவி லதா மீதும் வழக்குப்பதிவு...

முறைகேடாக பல கோடி சொத்துக்களை குவித்த  முன்னாள் சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பாளர் பாண்டியனின் மனைவி மீதும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

முறைகேடாக பல கோடிகளை குவித்த சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர்... பாண்டியனின் மனைவி லதா மீதும் வழக்குப்பதிவு...
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள சுற்றுச்சூழல் துறை அலுவலகம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியன் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் காட்டப்படாத பணமான 88,500 மற்றும் 38,000 ரூபாய் அடங்கிய வங்கி கணக்கு புத்தகம் சிக்கியது.

 
மேலும் பல கோடி சொத்துகள் முறைகேடாக பாண்டியன் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பாண்டியன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை சாலிகிராமம் திலகர் தெருவில் உள்ள பாண்டியனின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். 
 
அங்கு  ரொக்கமாக 1.37 கோடியும், 3 கிலோ தங்கம், 7 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்யப்பட்டது. பல மடங்கு சொத்துக்களை பாண்டியன் முறைக்கேடாக குவித்தது தெரியவந்ததால் உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
 
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளின் ஆவணங்களை திரட்டும் பணியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஈடுபட்டு பாண்டியன் மற்றும் அவரது மனைவி லதா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். இது இரண்டாவது வழக்காக பதியப்பட்டுள்ளது.

இந்த முதல் தகவல் அறிக்கையில், "சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை சுற்றுச்சூழல் துறை அலுவலகத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு  முதல் 2020 ஆம் ஆண்டுவரை பாண்டியன் வேலை பார்த்தார். இந்த காலகட்டங்களில் முறைகேடாக சட்டத்திற்கு புறம்பாக பாண்டியன் அவரது பெயரிலும் மனைவி லதா பெயரிலும் வருவாய் சேர்த்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை உள்ள காலகட்டங்களில் பாண்டியன் முறைக்கேடாக வருவாய் ஈட்டியது தெரியவந்தது. கடந்த 2013 ஆம் ஆண்டு வரை பாண்டியனின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு 21 லட்சத்து 25 ஆயிரத்து 350 ரூபாய் இருந்தது, 2013 முதல் 2020 வரைக்குள் 6.18 கோடி முறைகேடாக பாண்டியன் சொத்துகள் குவித்தது தெரியவந்தது. 
 
மேலும் 2013 முதல் 2020 வரை பாண்டியனின் வருமானம், பிற வருவாய்கள் மூலம் கிடைத்த தொகையின் மதிப்பு 73 லட்சம், ஆனால் செலவு செய்த தொகை மட்டுமே 1.90 கோடி என தெரியவந்தது. மேலும் குறிப்பிட்ட காலக்கட்டங்களில் பாண்டியன் குடும்பத்தினர் 5.97 கோடிக்கு சொத்துக்களும், 1.17 கோடி சேமிப்பு கணக்கில் வைத்திருப்பதும் தெரியவந்தது. 
 
பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினர் முறைக்கேடாக 7.15 கோடி ரூபாய்க்கு முறைக்கேடாக சொத்துகள் சேர்த்திருப்பது தெரியவந்தது." இதனையடுத்து பாண்டியன் மற்றும் அவரது மனைவி லதா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த  முதல் தகவல் அறிக்கை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.