அடிப்படை வசதிக்கூட இல்லாமல் தவிப்பு... பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை... கள்ளக்குறிச்சியில் கிராம மக்களின் குமுறல்...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

அடிப்படை வசதிக்கூட இல்லாமல் தவிப்பு... பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை... கள்ளக்குறிச்சியில் கிராம மக்களின் குமுறல்...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம் வி.மாமாந்தூர். இந்த கிராமத்தில் சுமார் 750 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன, ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமம் தெற்கே பெரம்பலூர் மாவட்டத்தையும், மேற்கே கடலூர் மாவட்டத்தையும், கிழக்கே சேலம் மாவட்டத்தையும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைக்கும் முக்கிய பகுதியாக உள்ள கிராமம் ஆகும். இந்த கிராமத்தில் பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசின் மூலம் செய்யப்படும் அடிப்படை வசதிகள் சரியாக கிடைப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

கிராமத்தின் அரசு கட்டிடங்கள் பயன்பாடின்றி இடியும் தருவாயில் உள்ளதால் அவற்றை சீர்செய்ய வேண்டும் என வி.மாமாந்தூர் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த 2013- 14 ஆம் ஆண்டு ரூ 13 லட்சம் மதிப்பீட்டில் கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. அது தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாகவும், இடிந்து விழும் நிலையிலும் உள்ளது. மேலும் இந்த கிராமத்தில் ஆண்களுக்கு என தனி கழிவறையும், பெண்களுக்கென தனி கழிவறையும்  தலா 4 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.

ஆனால் அது பொது மக்களுக்கு பயன்படுத்த படாமலேயே தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. குடிதண்ணீருக்காக 5 ஆழ்துளை கிணறுகள் மின் மோட்டாரு டன் அமைக்கப்பட்டும் குடிதண்ணீருக்கு கடுமையான தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால்  அருகிலுள்ள கடலூர் மாவட்ட எல்லையில் உள்ள பனையாந்தூர் என்ற கிராமத்தில் சென்று குடிநீர் எடுத்து குடிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர். 

மேலும் இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது அதில் சுவர்கள் இடிந்து விழும் நிலையில் பராமரிப்பின்றி காணப்படுவதால் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் பள்ளியில் பயின்று வருகின்றனர். பள்ளியின் பின்புறம் தண்ணீர்  குளம் உள்ளதால் பள்ளியில் பயிலும் சிறுவர், சிறுமிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் உள்ளது. அரசின் மூலம் கட்டப்படும் கட்டடங்களை பயன்பாட்டில் உள்ளதா? இல்லையா? என அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை இதுகுறித்து ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டமாக இருந்த பொழுது பொதுமக்கள் மனு அளித்தும், தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாக உருவாக்கப்பட்ட பின்பும் பலமுறை மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை.

அரசு மூலம் ஒதுக்கப்படும் நிதி என்பதால் யாருக்கும் பயன்படாமல் வீணாகிப் போக வேண்டுமா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் சார்பில் அதிகாரிகளுக்கு எந்தவிதமான தகவலும் அளிப்பதில்லை அதிகாரிகளும் இந்த கிராமத்தை கண்டு கொள்ளாமலேயே இருந்து வருகின்றனர். மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம் என்பதால் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டுமா? அடிப்படை வசதிகளின்றி எப்படி கிராமத்தில் குடியிருப்பது என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

எனவே இந்த கிராமத்துக்குரிய  அனைத்து அடிப்படை வசதிகளையும் தமிழ்நாடு அரசு செய்து தர வேண்டும் எனவும், அவைகள் பயன்பாட்டில் உள்ளதா என தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்தும்  பார்க்கவேண்டும், எனவே கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரும், தமிழ்நாடு அரசும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வி. மாமாந்தூர் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டுமெனவும் இடியும் நிலையில் உள்ள அரசு கட்டிடங்களை சீரமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை.