மீனவர்களுக்காக மானிய டீசல் விற்பனை நிலையம்...! திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்..!

சீர்காழி அருகே வானகிரி மீனவர் கிராமத்தில் 50 லட்சம் மிதிப்பீட்டில் மானிய டீசல் விற்பனை நிலையத்தை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்

மீனவர்களுக்காக மானிய டீசல் விற்பனை நிலையம்...! திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்..!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வானகிரி மீனவர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் 700 க்கும் மேற்பட்ட விசைபடகு, பைபர் படகு, நாட்டு படகுகள் மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் படகுகளுக்கான மானிய டீசல் விற்பனை நிலையம் இல்லாததால் அடுத்தடுத்த ஊர்களுக்கு சென்று, கூடுதல் விலைக்கு டீசல் வாங்கி பயன்படுத்தி வந்தனர். இதனால் நேர விரயமும், பொருட்செலவும் அதிகரித்து மீனவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். 

இதனை அடுத்து தங்கள் பகுதியிலேயே மானிய விலையில் டீசல் விற்பனை நிலையம் அமைக்க வேண்டும் என வானகிரி  மீனவர்கள்  நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். மீனவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பாக ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் மீனவர்களுக்கான மானிய டீசல் விற்பனை நிலையம் கட்டப்பட்டு, இன்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம். முருகன் டீசல் விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன், மாவட்ட பொருளாளர் ஜி. என். ரவி, ஒன்றிய செயலாளர்கள் பஞ்சுகுமார், அப்துல் மாலிக் மற்றும் வானகிரி மீனவ பஞ்சாயத்தார், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.