ஹெச். ராஜாவின் அவதூறான கருத்துக்கள்... காவல்துறையில் புகார் அளித்தார் சுபவீரபாண்டியன்...

ஊடகவியலாளர் சந்திப்பின்போது தன்னைப் பற்றி அவதூறான கருத்துக்களைப் பேசிய பா.ஜ.க-வைச் சேர்ந்த எச்.ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

ஹெச். ராஜாவின் அவதூறான கருத்துக்கள்... காவல்துறையில் புகார் அளித்தார் சுபவீரபாண்டியன்...

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் பா.ஜ.க மூத்த தலைவரான எச்.ராஜா மீது புகார் ஒன்றை அளித்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுப. வீரபாண்டியன், கடந்த 27 ஆம் தேதி திரைப்படம் ஒன்றை கண்டுவிட்டு அதுபற்றிய கருத்துகளைக் கூற செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க-வைச் சேர்ந்த எச்.ராஜா சம்மந்தமில்லாமல் தன்னைப்பற்றி அவதூறான கருத்துக்களை பேசியதாக தெரிவித்தார். 

"ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்தது தொடர்பாக சுப. வீரபாண்டியன் பொய்யுரைப்பதால், அவரது மூளை குப்பைத் தொட்டியாக உள்ளது" எனவும், "சுப.வீரபாண்டியன் தி.மு.க-வின் தலைமை நிலையமான அறிவாலயத்தின் வாசலில் இருந்து பிச்சை எடுக்கிறான்" எனவும் வயது வித்தியாசம் பாராமல் ஒருமையில் தன்னைப்பற்றி அவதூறாகப் பேசியதாக அவர் குறிப்பிட்டார்.

அதுமட்டுமல்லாமல் எச்.ராஜா பத்திரிக்கையாளர்கள் அனைவரையும் "Presstitudes" என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வசைபாடியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும், இவ்வாறு தொடர்ந்து அவதூறான கருத்துக்களை பொதுவெளியில் பேசி வரும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், தி.மு.க தலைமையிலான தமிழக அரசு காவல்துறையின் மூலம் எச்.ராஜா மூலம் நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும், நீதிமன்றங்களை நாடவேண்டிய அவசியம் வராது எனவும் அவர் தெரிவித்தார்.