மாற்றுத்திறனாளி மாணவர்கள் உதவியாளர் தேவைப்படுவோர் ஜன -13 வரை விண்ணப்பம் - தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களில் உதவியாளர் தேவைப்படும் மாணவர்களுக்காக பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழங்கிய சலுகை கோரும் விண்ணப்பங்களை வரும் ஜனவரி 13-ம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஒப்படைக்க வேண்டும்
மாற்றுத்திறனாளி மாணவர்கள் உதவியாளர் தேவைப்படுவோர் ஜன -13  வரை விண்ணப்பம் - தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
Published on
Updated on
1 min read

பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களில் உதவியாளர் தேவைப்படும் மாணவர்களுக்காக பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழங்கிய சலுகை கோரும் விண்ணப்பங்களை வரும் ஜனவரி 13-ம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஒப்படைக்க வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்ககம் கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் பொது தேர்வுகளின் போது மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதற்கு உதவியாளர் நியமிக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் 2022 - 2023 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களில் தேர்வு எழுத உதவியாளர் தேவைப்படுபவர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம், மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டையின் நகல், மருத்துவ குழுவின் பரிந்துரை கடிதம் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகத்தில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

டிசம்பர் 29-ம் தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும், தாமதமாக விண்ணப்பங்கள் பெறப்படின் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களின் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில், பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழங்கிய மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கான சலுகைகள் கோரும் விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் மாவட்ட கல்வி அலுவலர்கள் அந்தந்த மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் வரும் 13 -ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என கடிதம் அனுப்பியுள்ளது.

மாவட்டக் கல்வி அலுவலர்களால் பரிந்துரைக்கப்பட்டு, ஒருமித்து தொகுத்து அனுப்பப்படும் பட்டியல் மட்டுமே பரிந்துரைக்கப்படும் எனவும், மாவட்டக் கல்வி அலுவலரின் பரிந்துரையின்றி பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com