கடிதம் எழுதி வைத்து காணாமல் போன மூன்று மாணவிகள்...!

கடிதம் எழுதி வைத்து காணாமல் போன மூன்று மாணவிகள்...!

சேலம் அருகே படிப்பில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக பள்ளியிலிருந்து வீட்டுக்கு செல்லாமல் தப்ப முயன்ற மாணவிகளை போலீசார் மீட்டுள்ளனர்.

தொடர் மாணவ மாணவிகளின் விபரீத செயல்கள்:

சமீப காலமாகவே, மாணவ, மாணவிகள் தொடர் தற்கொலையில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஒரு சிலர் கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் செல்வது போன்ற நிகழ்வுகள் தொடர் கதையாகி வருகிறது. ஏன் மாணவ மாணவிகள் இப்படிபட்ட விபரீத முடிவுகளை கையில் எடுக்கின்றனர் என்பது கேள்வி குறியாகவே இருந்து வருகிறது. உண்மையில் இவர்களுக்கு படிப்பில் தான் ஏற்படும் அழுத்தம் தான் காரணமா? என்பது குறித்த கேள்விகள் அனைவரிடமும் நிலவி வருகிறது. தற்போது, இதுபோன்ற ஒரு சம்பவம் தான் சேலம் அருகே அரங்கேறியுள்ளது.

கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் சென்ற மாணவிகள்:

சேலம் அருகே சூரமங்கலம் நகரமலை அடிவாரத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மூன்று மாணவிகள், ’தாங்கள் யாரையும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை, பள்ளி நிர்வாகம் எந்த வகையிலும் இதற்கு காரணமல்ல’ என்று, அவரவர் பள்ளி அறையில் தனித்தனியாக கடிதம் எழுதி வைத்துவிட்டு பள்ளியிலிருந்து வீட்டுக்குச் செல்லாமல் காணாமல் போய் உள்ளனர்.

தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்:

மாணவிகள் கடிதம் எழுதிவைத்துவிட்டு காணாமல் சென்றது குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார், பள்ளியில் இருந்த கடிதத்தைக் கைப்பற்றி, பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

விசாரணை:

இதனிடையே, சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோதா, சம்பந்தப்பட்ட பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

செல்போனில் தொடர்பு கொண்ட மாணவி:

போலீசார் ஒருபுறம் தீவிர தேடுதல் பணியில்  ஈடுபட்டுக்கொண்டிருக்க, மறுபுறம் காணாமல் போன மூன்று மாணவிகளில் ஒருவர் ஓமலூர் செல்லும் பேருந்தின் நடத்துனரிடமிருந்து, செல்போனை வாங்கி உறவினருக்கு தொடர்பு கொண்டுள்ளார். இந்த தகவலை அடுத்து, துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர் மூன்று மாணவிகளையும் பத்திரமாக மீட்டு பள்ளிக்கு அழைத்து சென்றனர்.

வாக்குமூலம்:

மாணவிகளிடம் விசாரணை நடத்திய போலீசார், அதிகப்படியான படிப்பின் அழுத்தம் காரணமாக சென்றுவிட்டதாக மாணவிகள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோதா, அந்த மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். 

பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுரை:

பின்னர், அந்த மூன்று மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம்  என இரண்டு தரப்பினரிடமும் படிப்பில் அதிகப்படியான அழுத்தம் கொடுக்கக் கூடாது என்று அறிவுரை வழங்கி பெற்றோர்களுடன் மாணவிகளை அனுப்பி வைத்தனர்.